தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்காடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம், டெல்லியில் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இதில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார், அணைகளில் எவ்வளவு தண்ணீர் இருந்ததோ அதை தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டதாகவும், தற்போது காவிரியில் தண்ணீர் இல்லை எனவும் கூறினார். தற்போது உள்ள நீரை குடிப்பதற்கு சேமிக்கவே சிரமத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காவிரி விஷயத்தில் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். காவிரி பிரச்னையை தீர்க்க அக்கட்சிகளால் முடியவில்லை என அவர் விமர்சித்தார்.







