தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (15.10.2026) தலைமைச் செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு குறைக்கடத்தி (Semiconductor) சூழலமைப்புத் திட்டத்தை வெளியிட்டார். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தி மையமாக உருவாக்கவும், குறைக்கடத்தித் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முக்கிய முன்னெடுப்பாக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் ‘குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் பூங்கா’ அமைக்கப்படும் என 31.8.2026 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். மேலும், 2026-2027-ஆம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது, தொழில்துறை அமைச்சர் ஒன்றிய அரசின் புதிய குறைக்கடத்தி ஊக்கத் திட்டத்துடன் இணைந்து, தமிழ்நாட்டில் அமையவுள்ள குறைக்கடத்தி நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப பிரத்யேக மாநில ஊக்கத்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.
சிப் வடிவமைப்பு, குறைக்கடத்தி உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், வேஃபர் ஃபேப்ரிகேஷன் (Fabs), ATMP/OSAT, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு உள்ளிட்ட முழுமையான குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு 15.07.2026 அன்று Semicon India Programme 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரால் நேற்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு குறைக்கடத்தி சூழவமைப்பு திட்டமானது இரண்டு பிரிவுகளின்கீழ் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது
ஒன்றிய அரசின் Semicon 2.0 / India Semiconductor Mission திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களுக்கு, ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் கூடுதலாக தமிழ்நாடு அரசு கூடுதல் ஊக்கத்தொகைகள் மற்றும் ஆதரவுகளை வழங்கும். மேலும், ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் இடம்பெறாத போதிலும், தமிழ்நாட்டின் குறைக்கடத்தி சூழலமைப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் தகுதியான முதலீட்டுத் திட்டங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேவைக்கேற்ப தனித்துவமான ஆதரவு மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கும்.
இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் பல்லவி வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.




