வயதாக வயதாக சிறப்பாக விளையாடுகிறேன் – டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல்

வயதாக வயதாக சிறப்பாக விளையாடுகிறேன் என காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தெரிவித்துள்ளார்.   இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்று 3 தங்கம், 1…

வயதாக வயதாக சிறப்பாக விளையாடுகிறேன் என காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தெரிவித்துள்ளார்.

 

இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்று 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்ற டேபில் டென்னிஸ் வீரர் சரத்கமல் டெல்லியில்
இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மாலை, சால்வை
அணிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

மேலும் அவர் பயின்ற பள்ளி சார்பில் தாமரை மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்கமல், அரையிறுதிக்கு பிறகு அதிக நம்பிக்கையோடு விளையாடினேன். கடினமாக ஆரம்பித்த போட்டி பின் சிறப்பாக அமைந்தது என்றார். 2006ம் ஆண்டு 2 தங்கம் வென்றிருந்தேன். இந்த முறை 3 தங்கம் வென்றுள்ளேன்.

இந்த போட்டி வாழ்க்கையில் சிறப்பான போட்டியாக அமைந்தது. விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்திமுக்கியத்துவம் வழங்க வேண்டும். மைதானங்கள் அதிகமாக உருவாக்கி தர வேண்டும். வீரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுவது முக்கியம். சிறுவயது முதல் விளையாட்டை முதன்மையாக எடுக்க முடியாத நிலை தமிழ்நாட்டில் உள்ளது.

 

படிப்பு முக்கியமானதாக இருப்பதால், விளையாட்டில் மாணவர்களுக்கு கவனம் செலுத்த முடிவதில்லை. சிறுவயதில் தன்னோடு இருந்தவர்கள் தன்னை விட சிறப்பாக விளையாட கூடியவர்கள் ஆனால் அவர்கள் படிக்க சென்றதால் விளையாட்டை தொடர முடியவில்லை. இளம் வயதை விட வயதாக வயதாக சிறப்பாக விளையாடுகிறேன். வரக்கூடிய சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்கு பதக்கங்களை வென்று தருவேன் என சரத்கமல் நம்பிக்கை தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.