வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும். இருப்பினும் அக்டோபர் மாதம் முழுவதுமே பரவலாக மழை பெய்யும். அதன்படியே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. அதனுடன் தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும், அதேபோல் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதாவது அக்.15ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பருவமழைக்கு முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியில் ஏற்பட்டது போல் மழை பாதிப்பு இம்முறை ஏற்படாது. மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள் கண்காணிக்கப்படுகின்றன.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.”
இவ்வாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.







