டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இல்லம் தேடி பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனத்தின்போது முன்னுரிமை
வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மேலும், இந்த வருட இறுதிக்குள் தமிழ்நாடு கல்வி கொள்கை உருவாக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராஜகோபால தொண்டைமானின் திருவுருவச் சிலைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதக அம்சங்கள் குறித்தும் எதற்கு நாம் அதனை
எதிர்க்கிறோம் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கல்விக் கொள்கை உருவாக்க வேண்டும் என்றுதான் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு மாதந்தோறும் ஒன்றுகூடி தமிழ்நாட்டுக்கு என்று தனியாக ஒரு கொள்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
புதிதாக 13 ஆயிரத்து 331 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கு முதலமைச்சர்
ஒப்புதல் வழங்கி உள்ளார். உடனடியாக 8,000 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் அடுத்தாண்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இனிமேல் ஆன்லைனில் கல்வி தேவைப்படாது. தேர்வில் மதிப்பெண் குறைந்து இருந்தாலும் தோல்வியடைந்தாலும் மாணவர்கள் மனதை
தளர விடக்கூடாது.
மாணவர்கள் உயர்கல்வியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காக தான் ஜூலை மாதமே தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் ஜூலை மாதம்
நடத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்து பேசாதீர்கள்.
மாணவர்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ அந்தப் பாடத்தை அவர்கள் தேர்வு
செய்து படிக்க செய்ய வேண்டும். மாணவர்களின் திறமைகளை கண்டறியும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உள்ளது; ஆசிரியர்களுக்கும் உள்ளது என்றார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.








