தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அரசியல் நண்பர் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் ஆளுநராகவும் மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராகவும் உள்ள இல.கணேசன் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மாலை சென்னை வருகிறார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக இருவரும் பேசலாம் எனக் கூறப்படுகிறது. அத்துடன், பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மாநாடு, அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பு குறித்தும் ஸ்டாலினுடன் பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் சென்னை வருவதற்காக கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து கிளம்பினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறேன். அவர் என்னுடைய அரசியல் நண்பர். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இரண்டு அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும் போது அரசியல் தொடர்பாக விவாதிக்கப்படுவது இயல்புதானே” என்று தெரிவித்தார்.







