தாம்பரம் அருகே கர்ப்பிணியை வீட்டிலேயே வைத்து அவரது சகோதரர் பிரசவம் பார்த்தபோது, குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் சிபின். இவரது பெற்றோர் உயிரிழந்த நிலையில், தத்தெடுத்த சகோதரி மோனிஷா என்பவருடன் அவர் வசித்து வருகிறார்.
தங்கை மோனிஷா அதேபகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமுற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மோனிஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் சிபின் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.
அப்போது, வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த நிலையில், அதிக ரத்தப்போக்கு காரணமாக மோனிஷா மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, இறந்த குழந்தையின் உடலை பையில் வைத்து தெருமுனையில் வைத்துவிட்டு மோனிஷாவை சிபின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
குழந்தை எங்கே என மருத்துவர் கேட்டதை அடுத்து, சிபின் நடந்ததை கூறினார். இதுகுறித்து, மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிபினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







