கட்டுரைகள்

ஆப்கனில் தலிபான் ஆட்சி; அச்சத்தில் பெண்கள்


ஹம்சா

கட்டுரையாளர்

ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி கத்தாரில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி, ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டால் ஓரளவு சுமூகமான நிர்வாகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தலிபான்கள் இடைக்கால அரசு என்பதே வேண்டாம், என்று முடிவு செய்தனர். எனவே, மீண்டும் தலிபான்களின் நேரடி ஆட்சி ஆப்கானிஸ்தானில் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவர்கள் அங்கு கொண்டு வரவுள்ள ஷரியத் சட்டம் ஆப்கன் பெண்களை நடுங்கச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் இதன் மூலம், அந்நாட்டு பெண்கள் பல கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. அப்படி பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ள அந்த ஷரியத் சட்டத்தில் என்ன உள்ளது:

 

1) பெண்கள் அவசியமின்றி வீதியில் சுற்றுவதற்கு சுதந்திரம் இல்லை. அவசியம் உள்ள நிலையில் ஆண் உறவினர் ஒருவரின் துணையுடன் வெளியே வரலாம்

2) பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கட்டாயமாக புர்கா அணிந்து முகத்தை மறைக்க வேண்டும்

3) பெண்கள் ஹை ஹீல்ஸ் காலணிகளை அணியக்கூடாது

4) பொது இடங்களில் பெண்கள் சத்தமாக பேசக்கூடாது

5) தெருவில் நடந்து செல்லும் பெண்களை, ஆண்கள் பார்க்காமல் இருப்பதற்காக வீட்டிலுள்ள அனைத்து கட்டடங்களிலும் ஜன்னல்கள், கதவு அல்லது திரையால் மூடப்பட்டிருக்க வேண்டும்

6) பெண்கள் தங்கள் வீட்டின் பால்கனியில் நிற்கக்கூடாது

7) பெண்கள் பொது கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது

8) பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது

9) பெண்கள் பள்ளிக்கு செல்லவும் தடை

இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை அடங்கியதுதான் ஷரியத் சட்டம். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு கொடூரமான தண்டனைகளும் வழங்கப்படும்.
பெண்கள் நினைப்பதைக்கூட மனம் திறந்து சொல்லக்கூடாது. ஆண்களுடன் இணைந்து பணியாற்றக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்படவுள்ளன. இதுமட்டுமின்றி, திருமணம் ஆகாத 12 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கவும் தலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலிபான்களின் விதிகளை மீறிய பெண்கள் சிலரை பொது இடங்களில் அவமதித்தும், அவர்களை கொடூரமாக அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். இதுபோல், 1996ல் பெண் ஒருவர் நகங்களில் வண்ணம் பூசியதற்காக அவரது கட்டை விரலையே வெட்டி தண்டித்துள்ளனர். பெண்கள் எந்த உடைகளை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறியதற்காக 225 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சட்டங்களை மதிக்காததால் அவர்களை தலிபான்கள் சவுக்கால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

1999-ல் தனது கணவரை கொன்றதற்காக 30,000த்திற்கும் மேற்பட்டோர் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் அவர் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் தூக்கிலிடும் வரை சித்திரவதை செய்யப்பட்டார். இதுபோன்ற பல கஷ்டங்களையும், கொடுமையான தண்டனைகளையும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் எதிர்கொண்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ஆப்கானிஸ்தானில் அசாதாரண உயிரிழப்புகளின் எண்ணிக்கை கிட்டதட்ட 50% ஆக அதிகரித்துள்ளது.

தலிபான்களுக்கு அளித்த உறுதிமொழியின்படி அமெரிக்கப் படைகள் நாட்டை விட்டு வெளியேறியதே இந்த நிலைக்கு காரணம் என்றும் கூறலாம். இரண்டாவதாக, சீனா தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானோடு நட்புடன் உள்ளது. இப்படி ஆப்கன் மக்களை பாதுகாக்க வேண்டிய அனைத்து நாடுகளும் அந்நாட்டு மக்களை கைவிட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இதனால், அந்நாட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

காசு, பணம், துட்டு… புழக்கத்தில் குறைகிறதா ரூ.2000?

Halley karthi

தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்?

Ezhilarasan

பெருமாள் முருகனின் வரிகளில் அம்பேத்கருக்கு கர்நாடக இசையில் T.M. கிருஷ்ணாவின் பாடல்!

எல்.ரேணுகாதேவி