டி29 உலக கோப்பை போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் கடந்த 26ம் தேதியன்று நடைபெற இருந்த போட்டியில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்தன. ஆனால் மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணியை வீழ்த்திய உற்சாகத்தில் அயர்லாந்து அணி இன்று களம் இறங்குகிறது.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடைசியாக இங்கிலாந்து அணி விளையாடிய போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது.
மறுபுறம், கடந்த 26ம் தேதியன்று ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் ஒருவேளை இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இங்கிலாந்து அணிக்கு வாழ்வா? சாவா ஆட்டமாக மாறலாம்.







