டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது.   ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.   இந்த தொடரில்…

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது.  

ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.   இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 27வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – நெதர்லாந்து அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அந்த வகையில்,  முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாண்டோ மற்றும் அவரை தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.  இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷகிப் அல் ஹசன் – தன்சீத் ஹசன் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.  இவர்களில் தன்சீத் ஹசன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய ஷகிப் அரை சதம் அடித்து 64 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.  நெதா்லாந்து அணி தரப்பில் ஆரியன் தத், பால் வான் மீகெரன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும்,  டிம் பிரிங்லே 1 விக்கெட்டையும் கைப்பற்றினா்.  இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்சேல் 18 ரன்களும்,  மேக்ஸ் ஓ டவுட் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர்.  இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங்,  26 ரன்களும்,  எங்கல்பிரிட் 33 ரன்களும் எடுத்து ரன்களை சேர்த்தனர்.  தொடர்ந்து,  ஒருசில ஓவர்களிலேயே அடுத்தடுத்த  விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி தடுமாறியது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களே மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது.  வங்காளதேச அணி தரப்பில் ரிஷாத் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி சூப்பா் 8 சுற்றை நெருங்கியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.