மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வீடியோ இந்தியாவையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இப்போது வர வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்திய போதிலும், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூர் சென்றடைந்துள்ளார்.
கடந்த மே 4-ம் தேதி, மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றனர். அவர்களில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சுற்றிலும் ஆண்கள் புடைசூழ செல்போன் கேமராக்களில் படம் பிடித்துக் கொண்டே ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதோடு, ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல், தங்களை விட்டு விடும்படி அந்த இளைஞர்களிடம் பழங்குடியின பெண்கள் கெஞ்சிய போதும், தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்திருக்கின்றனர்.
அதிலும் இச்சம்பவத்தை தடுக்க முயன்ற ஒரு பழங்குடியின இளைஞரையும், பெண் ஒருவரின் தந்தையையும் அந்த கும்பல் அடித்துக் கொன்றதோடு, அந்த ஊர் மக்களை அச்சுறுத்தும் படியான வன்முறை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவையே வெட்கி தலைகுனிய வைத்த இது தொடர்பான விடியோ காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது நாட்டையே உலுக்கி வரும் நிலையில், இந்த காணொளி காட்சி சம்பவத்தின் உண்மை தன்மையை மணிப்பூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அரசியல் தலையீடுகள் ,கண்டனங்கள் என அங்கங்கே அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இன்று மணிப்பூர் சென்றடைந்துள்ளார். இம்பால் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நான் தற்போது நேராக முதல்வர் அலுவலகத்திற்குச் செல்கிறேன், முதல்வர் என் பிரேன் சிங்கைச் சந்திக்க விரும்புகிறேன், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களுக்கு சட்ட உதவி, ஆலோசனை அல்லது இழப்பீடு கிடைத்துள்ளதா என்பதைப் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்.
மேலும் நான் இங்கு அரசியல் செய்ய வரவில்லை, பிரதமர் மோடி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மணிப்பூருக்கு வருமாறு வேண்டுகோள் விடுகிறேன், இது தொடர்பாக அளுநரைச் சந்தித்து பேச நிச்சயம் முயற்சிப்பேன் ” என்று ஆவர் கூறினார். ஏற்கனவே, மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, அம்மாநில அரசு அவரின் பயணத்தை தள்ளி வைக்குமாறு கடிதம் அனுப்பி கேட்டுக்கொண்டு இருந்த நிலையில், தற்போது டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், அவர்களது வேண்டுகோளையும் மீறி மணிப்பூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
- பி.ஜேம்ஸ் லிசா







