நடிகை சுஷ்மிதா சென், தனது காதலரை பிரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக ’ரட்சகன்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அர்ஜுன் நடித்த ’முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இவர் நடித்த ’ஆர்யா’ என்ற வெப் தொடர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ’ஆர்யா 2’ வெப் தொடரில் நடித்து வருகிறார். 45 வயதான சுஷ்மிதா சென், இன்னும் திருமணம் செய்துகொள்ள வில்லை. இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் அவர், சிலருடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டவர்.
இந்நிலையில் தன்னை விட 16 வயது குறைந்த ரோஹ்மன் சாவ்ல் (Rohman Shawl) என்ற மாடலை கடந்த 3 வருடமாக காதலித்து வந்தார். இவர்கள் காதலில் பிரச்னை எழுந்ததாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது.
அப்போது நடிகை சுஷ்மிதா சென், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , “அவர் மாறுவார் என்று பெண்கள் நினைக்கின்றனர். அவர் மாறமாட்டார். அவள் பிரியமாட்டாள் என்று ஆண்கள் நினைக்கின்றனர். ஆனால் அவள் சென்றுவிடுவாள்” என்று கூறி இருந்தார். இதன் மூலம் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதுபற்றி அவர் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இருவரும் காதலிக்கிறார்களா, இல்லையா என்ற பஞ்சாயத்து பாலிவுட்டில் மீண்டும் தொடர்ந்தது. இதற்கு வழக்கம் போல இன்ஸ்டாவில் விளக்கம் அளித்திருக்கிறார் சுஷ்மிதா சென். ரோஹ்மனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், தனது காதல் உறவு முறிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ’நண்பர்களாக தொடங்கினோம், நண்பர்களாக இருப்போம், அன்பு எப்போதும் தொடரும், ஆனால் நீண்ட நாள் உறவு முடிந்துவிட்டது’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.









