‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின்போது உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. ஒடுக்கப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுவின் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டத்தை கதைக்களமாக இயக்குநர் த.செ.ஞானவெல் எடுத்திருந்தார். இத்திரைப்படம் அனைவரிடமிருந்தும் வரவேற்பை பெற்றபோதும், வன்னியர் சமுகத்தினரை விமர்சிப்பதாக பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
’ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு இயக்குநர் பாரதிராஜா, அமிர், வெற்றிமாறன் ஆகியோர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும் ஒட்டுமொத்த திரைத்துறையும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ஒன்று திரண்டது. மேலும் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதி உதவியை நேற்று நேரில் வழங்கினார்.
இந்நிலையில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.”இதுபோல ஒரு பேரன்பை இதுவரை பார்த்ததில்லை. எனது நன்றியை விவரிக்க வார்த்தைகள் வரவில்லை. எனக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.