ஜல்லிக்கட்டு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!…

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.…

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இதன் எதிரொலியாக 2017ம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது.

இதேபோல் சில மாநில அரசுகளும் கால்நடைகளை வைத்து நடத்தப்படும் போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் சட்டம் இயற்றின.  இச்சட்டங்களை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், விதிமீறல்கள் நடைபெறுகிறது எனவும் பீட்டா அமைப்பு சார்பில் வாதிடப்பட்டது. கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு, பாரம்பரிய இறைவழிபாடு என பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க நீதிமன்றங்களால் முடியாது என்றும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை விசாரிக்க கூடாது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும், அனைத்து விதிமுறைகளும் சரியாக வகுக்கப்பட்டு நடத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு வாதிட்டது.  அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் அடுத்த மாதம் ஓய்வு பெறும் நிலையில்  ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.