பெண்ணையாறு வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் திடீர் விலகல்!

பெண்ணையாறு நதி நீரை கர்நாடகா மாநிலத்துடன் பகிர்ந்து கொள்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் திடீரென விலகிக் கொண்டனர். தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு…

பெண்ணையாறு நதி நீரை கர்நாடகா மாநிலத்துடன் பகிர்ந்து கொள்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் திடீரென விலகிக் கொண்டனர்.

தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்னையை தீர்க்கும் விதமாக புதிய நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இறுதி உத்தரவு வரும் வரையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த மே 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஒரு மாதத்தில் நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘தென்பெண்ணையாறு விவகாரத்தில் நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைப்பதற்கு முன்னதாக ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இதுவரை அதில் முடிவெடுக்கப்படாமல் உள்ளது. அதனால் கூடுதல் அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கிய சிறிது நேரத்திலேயே வழக்கில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள்  ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகிய இருவரும் அறிவித்தனர். காரணம் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவராகவும் எம்.எம்.சுந்தரேஷ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆகவும் இருப்பதால் இந்த வழக்கை தாங்கள் தொடர்ந்து விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கில் இருந்து விலகியுள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த வழக்கை உரிய அமர்வு முன்பாக பட்டியலிடுவார் எனவும் அறிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஆனால், நீதிபதி எம்.ஆர்.ஷா ஓய்வு பெற்ற நிலையில் புதிய அமர்வில் வழக்கு பட்டியிலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.