அயோத்தியில் சூப்பர் ஹீரோக்கள் | AI படங்கள் சமூக ஊடகங்களில் வைரல்…!

அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் அவெஞ்சர்ஸ் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்களின் AI படங்கள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளன.  உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.  இந்நிலையில், அவருக்கான கோயிலை…

அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் அவெஞ்சர்ஸ் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்களின் AI படங்கள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளன. 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.  இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.  360 அடி நீளம்,  235 அடி அகலம், 161 அடி உயரத்தில்,  3 மாடிகள்,  5 குவிமாடங்கள்,  கோபுரம்,  360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.  இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.  பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.  குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது.  இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு,  அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

ராமர் சிலை பிரதிஷ்டை,  பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்,  உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல்,  முதல்வர் யோகி ஆதித்யநாத்,  கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.  இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,  அயோத்தியில் ராமர் கோயில் பணியில் அவெஞ்சர்ஸ் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்களின் AI படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தப் படங்களில் அயர்ன் மேன், பேட்மேன், டெட்பூல், ஜோக்கர், சூப்பர்மேன், ஜாக் ஸ்பாரோ, வொண்டர் வுமன், லோகி, தோர், க்ரூட், தானோஸ், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மற்றும் ஹாரி பாட்டர் போன்ற சூப்பர் ஹீரோக்கள் மற்றும் ஹாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் காவி உடை அணிந்து காணப்படுகின்றனர்.  சூப்பர்மேன் நெற்றியில் திலகம் அணிந்து, தலைப்பாகை அணிந்து, தோளில் மலர் மாலையை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்.

அதே நேரத்தில், ஜாக் ஸ்பாரோ மற்றும் வொண்டர் வுமன் விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். மார்வெலின் சூப்பர் ஹீரோ லோகி ஹார்மோனியா வாசிப்பதையும், அவரின் அண்ணன் தோர் தபேலா வாசிப்பதையும் நம்மாக் காண முடிகிறது.

க்ரூட் மற்றும் தானோஸ் சமைப்பதைக் காணலாம். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் அரிசி விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

மேலும், ஹாரி பாட்டரும் அவரது மற்ற தோழர்களும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.  இந்த படங்களை உருவாக்குவதன் மூலம் மக்களை சிரிக்க வைக்கவும், ஆன்மீகம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்பியதாக இதை உருவாக்கிய AI கலைஞர் கூறுகிறார்.

இந்த படங்கள் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படங்கள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த படங்கள் மிகவும் வேடிக்கையாக இருப்பதாகவும், சிலர் இந்த படங்கள் ஆன்மீக மிகுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இந்த படங்களை ஷாஹித் எஸ்கே (sahixd) என்ற AI கலைஞரால் Instagram இல் வெளியிடப்பட்டது. இந்த பதிவிற்கு இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் வந்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.