சுனந்தா புஷ்கரின் மரண வழக்கில், ஒரு கட்டத்தில் அவரது ரத்த மாதிரிகள் அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI வரை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சினிமாவை மிஞ்சும் வகையில், மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது அவரது மரணம்.
2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி, டெல்லி சாணக்கியபுரியில் உள்ள லீலாவதி பேலஸ் நட்சத்திர ஹோட்டலில், அறை எண் 345-ல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், அப்போதைய மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சுனந்தாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பின.
காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட சுனந்தா, ஏற்கனவே இருமுறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், 2010-ல் சசிதரூரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற இவர்களின் வாழ்க்கையில், பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவரால் புயல் வீசத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதை உறுதிபடுத்தும் வகையில், சுனந்தாவின் மரணத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு, அதாவது 2014 ஜனவரி 15-ம் தேதி, சசிதரூரின் ட்விட்டர் பதிவில், அவருக்கு பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹ்ர் தாரர் என்பவர், அனுப்பியதாக கூறப்படும் அந்தரங்கத் தகவல்கள், திடீரென தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. இதனிடையே அவர்கள் இருவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தவே, தான் அவ்வாறு செய்ததாகவும், மெஹர் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஏஜென்ட் என்றும், சுனந்தா புஷ்கர் தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சர்ச்சைகளின் இரண்டாவது நாளே, ஹோட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அரசியல் வட்டாரத்திலும் எதிரொலித்தது.
2014 ஜூலை 1-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா, பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக தவறான தகவலை அளிக்குமாறு, தனக்கு நெருக்கடி தரப்பட்டதாக கூறியது, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது சுனந்தாவின் மரணம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில், 2014 அக்டோபர் 10-ம் தேதி, பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சுனந்தா புஷ்கர் அதிக போதை மாத்திரைகள் உட்கொண்டதால் உயிரிழந்தார் என குறிப்பிட்டு, போலீசார் வழக்கை முடித்து வைத்தனர்.
2015 ஜனவரி 6-ம் தேதி, அப்போதைய டெல்லி காவல்துறை ஆணையராக இருந்த பி.எஸ்.பஸ்ஸி, சுனந்தா புஷ்கர் உயிரிழப்பு செய்யவில்லை என்றும், கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறியது, சுனந்தா மரணத்தில் அடுத்த சர்ச்சையை உருவாக்கியது. இதையடுத்து, வழக்கை மறுவிசாரணை செய்த டெல்லி போலீசார், மனைவியை கொடுமைப்படுத்தியது, உயிரிழப்பு க்கு தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ், சசிதரூரை முதல் குற்றவாளியாக சேர்த்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
பல்வேறு தரப்பிலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், சுனந்தாவின் ரத்த மாதிரி மற்றும் குடலில் இருந்த மாதிரிகள், சோதனைக்காக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI-க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவர் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. எனினும், ரஷ்ய உளவுத்துறை பயன்படுத்தும் கொடிய விஷம் கொடுக்கப்பட்டு, சுனந்தா புஷ்கர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இதனால் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும், என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சுனந்தாவின் உடலில் 15 இடங்களில் காயங்கள் இருந்தது தொடர்பாக, சசிதரூர் மற்றும் அவருக்கு நெருங்கிய இரு நண்பர்களிடம், டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். எனினும், இது எப்படி ஏற்பட்டது என்பது குறித்து, இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், வழக்கின் இருதரப்பு விசாரணை முடிவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல், சுனந்தா கொலை வழக்கில் இருந்து, சசிதரூரை விடுவித்து தீர்ப்பளித்தார். இதுகுறித்து சசிதரூர் கூறுகையில், கடந்த ஏழரை ஆண்டுகளாக தான் அனுபவித்த மனவேதனை, முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், ஒரு திரில்லர் படத்தை மிஞ்சும் வகையில் சென்ற சுனந்தாவின் வழக்கில், அவரது மரணம் கொலையா, உயிரிழப்பா அல்லது இயற்கை மரணமா என்ற கேள்விக்கு மட்டும், இன்னும் விடை கிடைக்கவில்லை.








