பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

நிதி நெருக்கடி சிரமமாக இருந்தபோதும் விவசாயிகளுக்கு நிவாரண தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசால் அறவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில்…

நிதி நெருக்கடி சிரமமாக இருந்தபோதும் விவசாயிகளுக்கு நிவாரண தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசால் அறவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது :

“பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகிய 20 பொருட்களுடன் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும். கொரோனா ஊரடங்கில் குடும்பத்திற்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்று அப்போதைய ஆட்சியாளர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆட்சியாளர்கள் அதை ஏற்கவில்லை. வெறும் ரூ.1000 மட்டுமே வழங்கினார்கள். முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்திற்கு வழங்குவதாக சொன்ன மீதி தொகையான ரூ.4000, கருணாநிதியின் பிறந்த நாள் அன்று வழங்குவதாக கையெழுத்துதிட்டு அதை செயல்படுத்தியிருக்கிறார்.

பொங்கலுக்கு ரூ.2,500 சென்ற ஆண்டு எதற்காக கொடுத்தார்கள் என எல்லோருக்கும் தெரியும். பொங்கல் தொகுப்புடன் வேஷ்டி, சேலையும் கொடுக்கப்படும் மேலும் மக்களுக்கு சரியாக சென்று சேர்கிறதா என்பது கண்காணிக்கப்படும். நியாய விலைக்கடைகளில் 97% மக்கள் பயோ மெட்ரிக் பயன்படுத்துகிறார்கள் என்பதால் இத்தொகுப்பு அந்த முறையை பயன்படுத்தியே வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் 14 வகையான மளிகை பொருட்கள் கொடுப்பதாக முன்பு சொல்லவில்லை இருந்தும் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதை பலதரப்பட்ட மக்களும் பத்திரிக்கையாளர்களும் பாராட்டியிருக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு குறுவை சாகுபடி 95% மழை காலத்திற்கு முன்பாகவே கொள்முதல் செய்திருக்கிறோம். இதுவரை 7,50,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி சிரமமாக இருந்தபோதும் விவசாயிகளுக்கு நிவாரண தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.