சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு ஒரே ஸ்பூன் பயன்படுத்தப்படுவதால் வெளியே செல்லும் போது உணவு மற்றும் சமையல் பொருள்களை கையோடு எடுத்து செல்வதாக இன்போசிஸ் அறக்கட்டளை முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி தெரிவித்துள்ளது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அண்மையில் சமையல் கலை விமர்சகர் குணால் விஜயகருக்கு இன்போசிஸ் அறக்கட்டளை முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது :
நான் சுத்த சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். முட்டை மற்றும் பூண்டு கூட சாப்பிடுவதில்லை. சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு ஒரே ஸ்பூனைப் பயன்படுத்துவது சாத்தியம் என்பதால், வெளியே செல்லும் போது உணவு மற்றும் சமையல் பொருள்களை எடுத்துச் செல்வேன். குக்கரும் எடுத்து செல்வதால் சுடு தண்ணீர் சேர்த்து உடனடியாக உணவு சமைத்து விடுவேன். மேலும் எங்கு வெளியே சென்றாலும் சைவ உணவு இருக்கிறதா என தேடுவேன் என தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டி வெளியானவுடன் பல்வேறு தரப்பினர் ஆதரித்தும் எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் சொந்த உணவை எடுத்துச் செல்வதில் பின்னடைவு எதுவும் இல்லை, அது ஒரு நபரின் தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் சைவம், மேற்கில் உள்ள ‘சைவ’ உணவில் இருந்து மிகவும் வேறுபட்டது, அதில் முட்டை மற்றும் மீன் அடங்கும் என வாசகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“சுதா மூர்த்தியின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவது நியாயமற்றது. அவர் தனது சொந்த உணவை எடுத்துச் செல்கிறார், பூண்டு சாப்பிடுவதில்லை, இவை அவரது தனிப்பட்ட விருப்பங்கள், அவற்றை நாம் மதிக்க வேண்டும் என சப்ஸ்கிரைபர் ஒருவர் ஆதரவாக பதிவிட்டுள்ளார்.







