தங்கம் விலையில் திடீர் சரிவு..! சவரனுக்கு ரூ.800 குறைவு

சென்னையில் ஆபரண தங்கம் விலை திடீர் சரிவு. சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது.…

சென்னையில் ஆபரண தங்கம் விலை திடீர் சரிவு. சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணமாகும். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. காரணம் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பதால் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

மார்ச் மாத தொடக்கத்தில் சரிவை கண்ட தங்கம் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,155 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றத்தை கண்டு, மார்ச் 10-ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.35 உயர்ந்து ரூ.5190க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 11ல் ஒரு கிராம் தங்கம் விலையில் ரூ.80 உயர்ந்து ரூ.5270க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 12ம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது. தொடர்ந்து மார்ச் 13ம் தேதி ரூ.55 உயர்ந்து ரூ.5325க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 14ம் தேதி ரூ.65உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,390க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 16ம் தேதி கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,425க்கு விற்பனையானது. மார்ச் 17ம் தேதி ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,450க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டு மார்ச் 18-ஆம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் 44,480 க்கு விற்பனையானது. கிராமிற்கு 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,560 க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்றைய ஆபரண தங்கத்தின் விலை திடீர் சரிவை கண்டுள்ளது. சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 74 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.