முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

1032 பேரை தோற்கடித்து சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர் அரசியலுக்கே முழுக்கு


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

தமிழகத்தின் மூத்த பெண் அரசியல் தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான அவர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார். 

கடந்த 15ந்தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்காதபோதே அவர் திமுகவிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அதனை தற்போது உறுதி செய்துள்ளார் அவர். திமுகவிலிருந்து மட்டுமல்ல அரசியிலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் அமைச்சரவையிலும் இடம்பெற்ற  சுப்புலட்சுமி ஜெகதீசன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.கே.சரஸ்வதியிடம், 281 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. 1996ம் ஆண்டு இதே மொடக்குறிச்சி தேர்தலில் 1032 வேட்பாளர்களை எதிர்கொண்டு 39,540 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் 2021ல் 15 பேர் மட்டுமே போட்டியிட்ட தேர்தலில் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தேர்தல் தோல்விக்கு சொந்தக் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு வலு சேர்ப்பதுபோல் அவரது கணவர் ஜெகதீசனின் முகநூல் பதிவுகளும் அமைந்தன. ஆனால் இந்த அதிருப்திகளை துளியும் தமது அறிக்கையில் வெளிப்படுத்தாத சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடே போற்றும் அளவிற்கு கட்சிப் பணிகளையும், ஆட்சிப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார் என்கிற மனநிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

அரசியலில்  சுமார் 50 ஆண்டு காலம் பயணித்துள்ள, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டான 1947ம் ஆண்டு பிறந்தார்.  பெரியார் பிறந்த மண்ணாண ஈரோட்டு பெண்மணி என்பதாலயே பெண்ணுரிமை சார்ந்த கருத்துகளும், சமூகநீதி சிந்தனைகளும் அவரிடம் மேலோங்கி இருந்தன. காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் சுப்புலட்சுமி . ஆனால், அவரது கணவர் ஜெகதீசன் திராவிட இயக்க குடும்ப பின்னணியை கொண்டவர். திருமணத்திற்கு பிறகு சுப்புலட்சுமியும் திராவிட இயக்க சிந்தனைகளுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதிமுகவில் இணைந்து 1977 ம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் கைத்தறி துறைக்கு அமைச்சராகவும் உயர்ந்தார். பிறகு 1980 களில் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். 1989ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி தமிழகத்தில் அமைந்த போது, அவரது அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இடம்பெற்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன். 1992ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் தடா சட்டத்தில்  கைதாகி பின்னர் நிரபராதி என விடுதலை ஆனார்.

1996 ம் ஆண்டு நடைபெற்ற மொடக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தல் இவரது அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. அதிக வேட்பாளர்கள் களத்தில் நின்று உலக சாதனை படைத்த இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 1032 பேரை தோற்கடித்து சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.  பின்னர் அவரை தேசிய அரசியலுக்கு அனுப்பிவைத்தார் கருணாநிதி. 2004 நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி எம்.பி.யானார், மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்றார். அப்போது, பெற்றோர்களை கவனிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். முதியோர்களை பாதுகாக்க மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் ஏற்படுத்தவும் தாம் மத்திய அமைச்சராக இருந்தபோது தீவிர முயற்சி எடுத்தார்.

திமுக  துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் எஸ்.பி.சற்குணபாண்டியனுக்கு பின்னர் நீண்ட காலம் அங்கம் வகித்த பெண் என்கிற பெருமையும் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு உண்டு. இலங்கையில் உள்ள தொப்புள் கொடி உறவுகளின் உரிமை மீட்பு அமைப்பான டெசோ உறுப்பினராகவும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார் அவர்.  டெசோ மாநாட்டில் தமிழினத்தை அழிக்க மொழியை அழிக்கும் வேலையை இலங்கை அரசு செய்வதாக தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.

மதச்சார்பின்மை, நீட் தேர்வு, விவசாய பிரச்சினை, மாநில உரிமை , சமூக நீதி என
எவை குறித்தும் மத்திய பாஜக அரசின் மீதான விமர்சனத்தை தைரியமாக முன் வைத்துவந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், தன் கருத்தை எல்லா இடத்திலும் வெளிப்படையாக பேக்கூடியவர். ஓ.பன்னீர் செல்வத்தின் தர்மயுத்த பிரவேசத்தின் போது நம்பிக்கை
வாக்கெடுப்பில் திமுக ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளிக்கும் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்தை மறுத்தார் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின். சமீபகாலமாக அரசியலில் அதிக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது அரசியலுக்கே முழுக்கு போட்டுள்ளார். அவர் பாஜகவில் இணைவார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதனை உறுதிப்படுத்ததாத சுப்புலட்சுமி ஜெகதீசன் தொடர்ந்து சமூக பணிகளில் ஈடுபட உள்ளதாகக் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர், கருணாநிதி என ஆகச்சிறந்த ஆளுமைகளோடு  இணைந்து அரசியல் பணியாற்றி மத்திய, மாநில அமைச்சராக உயர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழ்நாடு அரசியலில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றுள்ளார். பல்வேறு தடைகளை தாண்டி அரசியலில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு சுப்புலட்சுமி ஜெகதீசனின் அரசியல் பயணம் ஒரு உத்வேகம்.

– எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்டி: 54-ஆயிரம் பேருக்கு பாராட்டு சான்றிதழ்

மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Vandhana

75வது ஆண்டு சுதந்திர தினவிழா; டெல்லியில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு

G SaravanaKumar