தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை வரவேற்ற அமைச்சர்

உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடந்துவருகிறது. இதனால் உக்ரைனில் பயின்று வரும்…

உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடந்துவருகிறது. இதனால் உக்ரைனில் பயின்று வரும் மாணவர்கள் உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் உயிருக்கு பயந்து தங்களது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வரிசையில் உக்ரைனில் வாழும் இந்தியர்களும் அடக்கம். போதுமான பாதுகாப்பு இல்லை என அங்குள்ள இந்திய மக்கள் குறிப்பிடுவதுடன், தங்களை காப்பாற்றுமாறு அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஹங்கேரியின் புடாபெஸ்ட் பகுதியிலிருந்து இந்தியர்களை சுமந்துகொண்டு மேலும் ஒரு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது. தொடர்ந்து காலை 9 மணி அளவில் விமானமானது டெல்லி வந்தடைந்தது . இந்த விமானத்தில் மொத்தமாக 240 பேர் வந்தனர். இதில் தமிழநாட்டை சேர்ந்த 12 பேர் இந்த விமானத்தில் வந்தனர். அவர்களை வரவேற்று சென்னைக்கு அனுப்பி வைக்க டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் டெல்லி விமான நிலையம் சென்றனர்.

டெல்லி வந்தடைந்த மாணவர்கள் இண்டிகோ விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்தனர். இவர்களை வரவேற்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையம் சென்றார். தொடர்ந்து விமான நிலையம் வந்தடைந்த 5 மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று மாலை வரும் விமானத்தில் 12 மாணவர்கள் வர உள்ளனர். உக்ரைனில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் உள்ளனர். அதில் 1800 மாணவர்கள் உதவி கோரியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.