ராசிபுரம் அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால், மாணவர்கள் ஆபத்தை உணராமல், ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாததால், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பெரப்பஞ்சாலை, பெரியகோம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில், செல்போன் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், ஆலமரம் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி அமர்ந்து, ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் மாணவர்கள் மரங்களில் ஏறி, இறங்குவது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கிராமப்புற பகுதிகளில் செல்போன் கோபுரங்களை நிறுவ, அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.







