முக்கியச் செய்திகள் தமிழகம்

உரிய அனுமதி பெறாமல் காப்பகம் நடத்தினால் கடும் நடவடிக்கை!

உரிய அனுமதி பெறாமல் காப்பகம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு மனநலம் குன்றிய, ஐஸ்வர்யா என்ற பெண்ணும், அவரது 3 குழந்தைகளும் 4 மாதங்களாக தங்கியிருந்தனர். ஐஸ்வர்யாவின் ஒரு வயது மகன் மாணிக்கத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 11ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக போலி சான்றிதழை காட்டியுள்ளனர். ஐஸ்வர்யாவை அந்த இல்லத்தில் அனுமதித்த சமூக ஆர்வலர் இதுகுறித்து விசாரித்தபோது, சான்றிதழ் போலி என்பது தெரிவந்தது. இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் அவர் புகார் அளித்தார். ஆட்சியர் உத்தரவை அடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், வட்டாச்சியர், காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது போலி ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தொண்டு நிறுவன இயக்குநர் சிவக்குமாரை தேடினர்.

இந்நிலையில், ஸ்ரீதேவி என்ற பெண்ணின் தனம்மாள் என்ற 2 வயது குழந்தையும் மாயமானதாக புகார் கூறப்பட்டது. போலீசார் அதுகுறித்து விசாரணையில் இறங்கினர். அப்போது, உயிரிழந்து விட்டதாகக் கூறப்பட்ட மாணிக்கம் என்ற ஒரு வயது குழந்தை, இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டிருந்தது தெரியவந்தது. துரிதமாக செயல்பட்ட தல்லாகுளம் போலீசார், அந்தக் குழந்தையை உயிருடன் மீட்டு, இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இரண்டாவதாக காணாமல் போன தனம்மாள் என்ற 2 வயது குழந்தையை தேடி, கல்மேடு பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்தக் குழந்தையும் மீட்கப்பட்டது. அந்தப் பெண்குழந்தையும் விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உரிய அனுமதி பெறாமல் காப்பகம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான எச்சரிக்கை அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் 15 முதியோர் காப்பகங்கள் மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. அவற்றில், மத்திய அரசிற்கு சொந்தமான முதியோர் காப்பகங்கள் இரண்டும், மாநில அரசுக்கு சொந்தமான முதியோர் காப்பகம் ஒன்றும் மற்றும் தனியார் காப்பகங்கள் 12க்கு மட்டும் அனுமதி மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்திற்கும் மேற்பட்ட முதியோர் காப்பகங்கள் தங்களுடைய உரிமங்களை இதுவரை புதுப்பிக்கவில்லை. சமூக நலத்துறை மூலம் உரிமம் புதுப்பிக்கபடாமல் உள்ள காப்பகங்களை கண்டறிந்து நேரில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் புதுப்பிக்கப்படாத முதியோர் காப்பகங்களில் முதியோர்கள் தங்க வைக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

தமிழகத்தில் இதுவரை 400 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!

Halley karthi

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, ரூ. 1,500 : சரியா? தவறா?

Jeba Arul Robinson

வனங்களை ஆண்ட பெண் சிங்கம்: வன அதிகாரி அபர்ணாவின் பயோபிக் ’ஷெர்னி’!

Vandhana