மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு பொதுமக்களிடம் பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு பணி நடைபெறும் போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்றுக் கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெறும் முகாம்களில் மின்வாரிய அதிகாரிகள் உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்கள் பிளக்ஸ் போர்டுகள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இணைப்பு பணியை மேற்கொள்வதற்காக நுகர்வோர்களிடம் பணம் வசூலித்ததாக புகார் வந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








