“மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்” – கனிமொழி கண்டனம்!

நாதகவினர் கைது செய்யப்பட்டு வருவதற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்டோர் மீது தேர்தல் நேரத்தில் போடப்பட்ட வழக்கு காரணமாக தற்போது வரை 10 நாதகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமிகு. கார்த்திகாவை த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், கழக ஆட்சியில் ஜனநாயக வழியிலேயே அவர்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என நாள்தோறும் மக்கள் இன்னலுக்குள்ளாகும் வேளையில், மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.