மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு தி.மு.க. அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டதாகவும், நுழைவுத் தேர்வுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில்மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும். அதோடு, 12 ம்வகுப்பில் பெறும் மதிப்பெண்ணிற்கு ஒரு மதிப்பு இல்லாமல் போய்விடுவதோடு, 12 ம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இதற்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத் தேர்வு விஷயத்திலாவது, காலந்தாழ்த்தாமல் நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.