இதுபோன்ற ஜாதிய மோதல்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – நெல்லை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் இனி இது போன்று ஜாதிய மோதல்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறையும் பள்ளிக்கல்வி துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக…

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் இனி இது போன்று ஜாதிய மோதல்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறையும் பள்ளிக்கல்வி துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

நாங்குநேரி பள்ளியில் சாதி ரீதியாக மாணவன் சின்னதுரைக்கு சில மாணவர்கள் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அதுகுறித்து ஆசிரியரிடம் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் சின்னதுரையின் வீடு புகுந்து சின்னதுரையையும், அவரது தங்கையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே சாதி வெறி இவ்வளவு தீவிரமாக இருப்பது அனைவரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே சாதிவெறியை களைய வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இதுகுறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பில் பெருமளவு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்தனர். இந்நிலையில் மேலும் ஒரு சிறுவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

”திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் சக மாணவர்களால் சாதி ஆதிக்க மனோபாவத்தால் வெட்டப்பட்ட விவகாரம் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் இனி இது போன்று ஜாதிய மோதல்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறையும் பள்ளிக்கல்வி துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகளில் ஜாதிய மோதல் நடைபெறாமல் இருப்பதை தடுக்கவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பள்ளிக் கல்வித் துறையும் காவல்துறையும் இணைந்து மாதம் தோறும் கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.