தமிழ்நாட்டில் மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம்..!

தமிழ்நாட்டில் மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 2025ஆம் ஆண்டின் மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரி 24.06.2025 அன்று தாம் எழுதியிருந்த கடிதத்தினை சுட்டிக்காட்டியுள்ளார். அதன் அடிப்படையில் பதப்படுத்தக்கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றும் கடந்த ஆண்டு நடந்தது போலவே இந்தப் பருவத்திலும் மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் ஒரு முக்கிய பகுதியாக இக்கடிதத்தை தாம் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தபடி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளைப் பின்பற்றாமல் பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழச் சாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், பானங்களில் மாம்பழக்கூழ் சேர்க்கப்படுவதில் FSSAI தரநிலைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைப் பிறப்பிக்குமாறு இந்திய அரசைக் தாம் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதுகுறித்த தனது கடிதத்திற்கு இன்னும் நேர்மறையான பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மாம்பழங்களை அடிப்படையாகக் கொண்ட பான உற்பத்தித் தொழிலில் குறைந்தபட்சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படவேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும்  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட இந்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), ஒருங்கிணைந்த பேக்கிங் செய்யும் வசதிகள், உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட துறைமுகங்கள். தரச்சோதனை ஆய்வகங்கள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், வெளிநாட்டு வாங்குபவர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் தலையிட்டு, மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய உதவிடுமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.