சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வ.உ.சிக்கு சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது, சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வ.உ.சிக்கு சிலை அமைக்கப்படும் என்றும், கோவை பூங்காவில் முழு சிலை அமைக்கப்படும் எனவும் கூறினார். தூத்துக்குடி மேல பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலையாக அழைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர், ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி.வாழ்ந்த இல்லம் மற்றும் நெல்லையில் உள்ள நினைவு இல்லம் புதுப்பிக்கப்படும் எனவும் கூறினார்.
வ.உ.சி.யின் வரலாற்றைச் சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் என்றும், வ.உ.சி. பெயரில் பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நெல்லையில் வ.உ.சி. படித்த பள்ளி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி.மறைந்த நாள் தியாக திருநாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.







