மாநில அந்தஸ்து விவகாரம் – புதுச்சேரியில் சூடுபிடிக்கும் அரசியல் களம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமிக்கு துணை நிற்போம் என்று திமுக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாநில அந்தஸ்து பெறமுடியவில்லை என்றால் முதல்வர் பதவி விலக…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமிக்கு துணை நிற்போம் என்று திமுக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாநில அந்தஸ்து பெறமுடியவில்லை என்றால் முதல்வர் பதவி விலக வேண்டும் என அதிமுக கூறி இருப்பதால் புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், இரு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரும் குழுவை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்த கருத்துக்கள் புதிய புயலை கிளப்பியுள்ளது.

தங்களுக்கு மரியாதை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாகவும், அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் கூறி இருக்கிறார். தங்களால் மக்களுக்கு எதுவுமே செய்து கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ள ரங்கசாமி, மத்திய அரசு முழு ஒத்துழைப்பைத் தருவதில்லை என்று வேதனையுடன் கூறி உள்ளார்.

முதலமைச்சர் ரங்கசாமி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினால் மட்டும் மாநில அந்தஸ்து பெற முடியாது என்றும், அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவையா, இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்து முதலமைச்சர் பேச வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து முதல்வர் விரும்பும் அதிகாரங்களை பிரதமர் மற்றும் அமித்ஷா வழங்குவார்கள் என புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

தம்மால் முடியவில்லை என்றால் முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு திமுக பக்கபலமாக இருக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார். முதல்வர் டெல்லி சென்று மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்று முன்னாள் எம்பி ராமதாஸ் கூறியுள்ளார்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென இதுவரை 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.