புதுச்சேரியில் வரும் சட்டமன்ற கூட்டத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அந்த தீர்மானத்துடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வலியுறுத்த இருப்பதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி
தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தனது ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். தற்போது மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் புதிய விளக்குகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 
அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அது பொங்கலுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் சைக்கிள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்,
மேலும் அரிசிக்கான நான்கு மாத பணம் மஞ்சள் அட்டை தாரர்களுக்கு 1200
ரூபாயும், சிவப்பு அட்டை தாரர்களுக்கு 2400 ரூபாயும் உடனடியாக செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்த ரங்கசாமி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 470 மதிப்பிலான பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்து, இதற்காக ரூ.17.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பொங்கல் பொருட்கள் அங்கன்வாடிகள் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார், 
தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல்
விலையை உயிர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் , தற்போது பால்
உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.34 வழங்கி வரும் நிலையில் ரூ.37 ஆக
லிட்டருக்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறினார். விலை உயர்வு இன்றிலிருந்து
அமலாகிறது எனவும், பால் உற்பத்தியில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரங்கசாமி கேட்டுக் கொண்டார்,
மேலும் கால்நடை தீவனம் வழங்காமல் இருந்ததாக தெரிவித்த அவர், தீவனத்திற்கான மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும், வழக்கமாக பொங்கலுக்கான துணி வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சிவப்பு
அட்டைதாரர்களுக்கு 1 நபர் இருந்தால் ரூ.500 ம், 1-க்கும் மேல் நபர்கள் உள்ள
குடும்ப அட்டைக்கு ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும்
தெரிவித்தார்,
புதுச்சேரியில் பால் தன்னிறைவு இல்லை என்பதால் வெளி மாநிலத்தில் இருந்து பால்
கொள்முதல் செய்து வருவதாகவும், பால் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் மானிய விலையில் கரவை மாடுகள் மற்றும் தீவன மானியம் வழங்கப்பட்டு வருகிறது எனவும் ரங்கசாமி கூறினார். 
தற்போது புதுச்சேரியில் இலவச உணவு பொருட்களுக்கான பணம் வங்கி கணக்கில்
செலுத்தி வருவதாக தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் ரேஷன் கடைகள்
திறந்து பொருட்கள் வழங்க வேண்டும் என்பது அரசின் எண்ணம் என்றும், விரைவில்
ரேஷன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 
தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, மத்திய அரசிடம் புதுச்சேரிக்கு மாநில
அந்தஸ்து வழங்க தொடர்ந்து கோரி வருவதாக குறிப்பிட்டார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்த அவர், வரும் சட்டமன்ற கூட்டத்தில் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கொண்டு பிரதமரை சந்தித்து தனி மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்த உள்ளதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.







