புதிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க மாநில கல்வி கொள்கை குழு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில், சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டிருந்தார். மேலும் இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்களை மாநில கல்வி கொள்கை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர்.

மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம் என்றும் விரைவில் மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரி வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அடுத்த கூட்டம் 27ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகள் நடத்தும் பள்ளிக்கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறையின் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தகவல் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்







