திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் தெரிவித்தார்.
திண்டிவனம், மைலம், செஞ்சி ஆகிய தொகுதிகளின், திமுக வேட்பாளர்களை ஆதரித்து செஞ்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என நான் கேள்வி எழுப்பியபோது, அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்குள் கொரோனா வராது என்றவர் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும், மக்களை நான் குழப்பி வருவதாக, மேடைக்கு மேடை முதல்வர் பேசி வருகிறார். ஆனால், மக்கள் தெளிவாக உள்ளனர். அது ஏப்ரல் 6-ம் தேதி தெரிந்துவிடும் என குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செஞ்சி கோட்டை பன்னாட்டு சுற்றுலா மையமாக மாற்றப்படும். மேலும், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும், விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்படும்” என பரப்புரையில் உறுதி அளித்தார்.
பின்னர் சென்னை பல்லாவரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏழைகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என பொய்யான வாக்குறுதியை கூறி அதிமுக மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் மு.க.ஸ்டாலின் அளித்தார்.







