ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக வத்திராயிருப்பைச் சேர்ந்த அந்த கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் போட்டியிட்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே அவர் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில் கொரோனா அறிகுறி காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். மாதவராவிற்கு பதிலாக அவரது மகள் திவ்யா ராவ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவந்தார்.
மாதவராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 7.55 மணி அளவில் மாதவராவ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மாதவராவ் தேர்தல் முடிவு வரும் முன்னரே உயிரிழந்தது அவரது உறவினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாதவராவ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே மாதவராவ் இறப்பதற்கு முன்பே வாக்குப்பதிவு முடிந்ததால் வாக்கு எண்ணிக்கை முறைப்படி நடைபெறும் என்றும், மேலும் அவர் வெற்றி பெற்றால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.