திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம்; சீரமைப்பு பணிகளுக்கான சாரம் கட்டும் பணிகள் தொடக்கம்…

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், கோபுரத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சாரம் கட்டும் பணிகள் தொடங்கின. ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுர…

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், கோபுரத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சாரம் கட்டும் பணிகள் தொடங்கின.

ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுர சுவரில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதனிடையே, நேற்று முன்தினம் மாலை திருச்சி பகுதிகளில் 30 நிமிடங்கள் வரை நல்ல மழை பெய்தது.

இதனால் விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர் மளமளவென இடிந்து விழுந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.50 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இடிந்த கோபுர சுவரினை முழுவதுமாக புதிதாக கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னர் ஸ்ரீரங்கம் கிழக்கு வாயில் கோபுரத்தின் பூச்சு சுவர் இடிந்து விழுந்த விவகாரம் குறித்து சிற்ப சாஸ்திர வல்லுநர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தாபதிகள் கொண்ட வல்லுநர்கள் குழு வழிகாட்டுதலின்படி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் துவக்கியுள்ளதாகக் கோயில் இணை ஆணையர் சிவ ராம் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோயில் கோபுரத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சாரம் கட்டும் பணிகள் தொடங்கின.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.