மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவுக்கு இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கின.
தமிழகம் முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேசன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன. இதில் முதல் கட்டமாக 704 ரேசன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் முதல் கட்ட முகாம் முடிவடைந்தது. மீதமுள்ள 724 ரேசன் கடைகளில் 5 -ம் தேதி முதல் வரும் 16-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு வருகிற 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும்.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் 2-வது கட்ட முகாம்கள் நேற்று தொடங்கின. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நகரப் பகுதி மக்களை மையப்படுத்தி இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களை வருகிற 16-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் திட்டத்துக்கான முதல் கட்ட முகாம்கள் மூலம் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை தபால் அலுவலகங்களிலும் தொடங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







