பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக, இரு தினங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இலங்கையின் 26வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய அமைச்சரவை விரைவில் அமையும் என்றும், அந்த அமைச்சரவை அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிப் பிரமாணத்திற்குப் பிறகு உரையாற்றிய ரணில், “இலங்கைக்கு பொருளாதார உதவிகள் செய்ய முன்வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவருடன் நெருக்கமான உறவை பேணுகிறேன். மக்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த சிக்கலை தீர்க்க விரும்புகிறேன்,” என்றார்.
போராட்டக்காரர்கள் விரும்பினால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்த ரணில், “பொருளாதார நெருக்கடியைக் கையாளும் வேலையை என்னால் செய்ய முடிந்தால், அதையும் நான் கையாள்வேன்” என்றும் குறிப்பிட்டார்.







