கடவுள் சதுரங்கம் விளையாடிய தலம்…பிரதமர் மோடி மேற்கோள்காட்டிய ஆலயத்தின் தல வரலாறு

இந்தியா உலகிற்கு வழங்கிய கொடைகளில் சதுரங்க விளையாட்டும் ஒன்று. புத்திக் கூர்மையை பட்டை தீட்ட உதவும் இந்த சதுரங்க விளையாட்டின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. நேற்று நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழாவில்…

இந்தியா உலகிற்கு வழங்கிய கொடைகளில் சதுரங்க விளையாட்டும் ஒன்று. புத்திக் கூர்மையை பட்டை தீட்ட உதவும் இந்த சதுரங்க விளையாட்டின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. நேற்று நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழாவில் இது குறித்து பெருமிதம் தெரிவித்து பேசிய பிரதமர் மோடி சதுரங்கத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள தொன்மையான தொடர்புகளை எடுத்துரைத்தார். இதற்காக சதுரங்க வல்லபநாதர் கோயிலின் தலவரலாற்றை அவர் மேற்கோள் காட்டினார். அந்த கோயில் எங்கே உள்ளது. அதன் சிறப்புகள் என்ன?

திருவாரூர் மாவட்டம்  நீடாமங்கலம் அருகே உள்ளது பூவனூர். தேவாரப் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது பூவனூர். சதுரங்க வல்லபநாதர் திருத்தலம்.  விளையாட்டிலும் தெய்வீகத்தைக் காண்பது நமது இந்திய நாட்டின் கலாச்சாரம் என்று பிரதமர் மோடி கூறியதற்கு உதாரணமாக விளங்கும் இந்த திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் மூலவர் ஸ்ரீசதுரங்கவல்லபநாதர் என அழைக்கப்படுகிறார். அவர் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார் என்பதை ஆலயத்தின் தலபுராணம் விளக்குகிறது.

முற்காலத்தில் தென் பாண்டிய நாட்டை ஆண்ட வசுசேனன் என்கிற மன்னனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. தனக்கு குழந்தை வரம் கிடைக்க  சிவபெருமானை வேண்டியபோது, பார்வதி தேவியை பூலோகத்தில் பிறக்கச் செய்து அந்த மன்னனுக்கு குழந்தையாக வளர்வதற்கு அருள்புரிந்தார். மன்னன் வசுசேனனும், அரசி காந்திமதியும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது தாமரை மலர் போன்ற ஒரு சங்கு அவர்கள் கைகளில் கிடைத்தது. அவர்கள் அதை கையில் எடுத்ததும் அழகிய குழந்தையாக மாறியது. அந்த குழந்தை இறைவனே அனுப்பியது என்பதை உணர்ந்த அந்த தம்பதி ராஜராஜேஸ்வரி என பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தனர்.

பூலோகத்தில் குழந்தையாக வளரும் பார்வதிதேவியை சிறப்பாக கவனித்துக்கொள்வதற்காக சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டியை பூலோகத்திற்கு அனுப்பினார் சிவபெருமான். அவரும், வளர்ப்பு தாயாக உருவெடுத்து வசுசேனனின் அரண்மனைக்குச் சென்று ராஜராஜேஸ்வரியை கவனித்துக்கொண்டார்.  சகல கலைகளிலும் ராஜராஜேஸ்வரியை மிகச் சிறப்பாக தேர்ச்சி பெறச் செய்தார் சாமுண்டி. குறிப்பாக சதுரங்க விளையாட்டில் ராஜராஜேஸ்வரியின் திறமை அனைவராலும் வியந்து போற்றப்பட்டது.

ராஜராஜேஸ்வரி வளர்ந்து இளமைப் பருவத்தை எட்டியதும், தனது மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே திருமணன் செய்து கொடுப்பேன் என அறிவித்தார் மன்னர் வசுசேனன். இதையடுத்து பல நாடுகளை சேர்ந்த இளவரசர்கள், இளைஞர்கள் ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடினர். ஆனால் எவராலும் அவரை வெல்ல முடியவில்லை. இவ்வாறு நாட்கள் கடந்த நிலையில் தனது மகளுக்கு திருமணமே ஆகாமல் போய்விடுமோ என அஞ்சிய வசுசேனன், சிவபெருமானிடம் வேண்டினார். மகளுக்கு திருமணம் நடைபெற வேண்டி காவிரி கரையோரம் உள்ள சிவாலயங்களை அரசியுடன் சென்று தரிசிக்க யாத்திரை கிளம்பினார். அப்போது திருப்பூவனூர் வந்த மன்னர் புஷ்பவனநாதரை தரிசித்துவிட்டு அந்த ஊரிலேயே தங்கினார்.

அப்போது மன்னரை சந்திக்க வந்த வயோதிகர் ஒருவர் இளவரசி ராஜராஜேஸ்வரியுடன் தான் சதுரங்கம் விளையாடத் தயார் எனக் கூறினார். வயோதிகர் வந்துள்ளாரே என மன்னர் முதலில் தயங்கினாலும், தான் ஏற்கனவே அறிவித்த அறிவிப்புபடி சதுரங்க போட்டியில் அவர் பங்கேற்க சம்மதம் சொல்ல வேண்டியதாயிற்று. அந்த முதியவரால் தம் மகளை சதுரங்கத்தில் ஜெயிக்க முடியாது என நம்பினார் வசுசேனன். ஆனால் அவர் எதிர்பார்த்தற்கு மாறாக சதுரங்க போட்டியில் யாராலும் வெல்ல முடியாமல் இருந்த ராஜராஜேஷ்வரியை வென்றார்  இதையடுத்து முதியவர் ஒருவர் தனது மகளை மணம் முடிக்கும் சூழ்நிலை வந்துவிட்டதே என வருந்திய வசுசேனன், என்ன இது சோதனை என சிவபெருமானிடம் வேண்டினார்.   அந்த நேரம் முதியவர் மறைந்து அந்த இடத்தில் சிவபெருமான் தோன்றினார். முதியவராக வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்து பெரும் மகிழ்ச்சி அடைந்த வசுசேனன் மனம் நிறைந்த பூரிப்போடு தனது மகளை சிவபெருமானுக்கு திருமணம் செய்துகொடுத்தார். இவ்வாறு சதுரங்கப்போட்டியில் வென்று ராஜராஜேஸ்வரியான பார்வதி தேவியை சிவபெருமான மணந்ததால், பூவனூர் ஆலயத்தின் மூலவர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் என அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகிறது.

இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால்,  சதுரங்கப் போட்டி மற்றும் கல்வி, கலைகளில் சிறந்த வெற்றிகளைப் பெறலாம் என்கிற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதிக கவனம் பெற்றது இந்த ஆலயம்.. ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் ஆலயத்திற்குள் சதுரங்க விழிப்புணர்வு போட்டிகளும் நடைபெற்றன. இந்நிலையில் பிரதமர் மோடி கடவுள் சதுரங்கம் விளையாடிய இடம் தமிழ்நாடு என மேற்கோள்காட்டிய நிலையில் சதுரங்க வல்லபநாதர் கோயிலின் பெருமைகள் மேலும் பறைசாற்றப்பட்டுள்ளன.

-எஸ்.இலட்சுமணன் 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.