பிரதமர் மாறிவிட்டார், அதிபர் மாறிவிட்டார்…இன்னும் இலங்கையில் மக்கள் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. ஜாதி, மத, இன பேதமற்ற ஒரு நம்பிக்கைக்குரிய தலைவனை தேடிக்கொண்டிருக்கிறதா இலங்கை?… ஆம் அப்படிதான் உணர்த்துகின்றன இலங்கையில் பெரும்பான்மையானவர்களாக உள்ள சிங்களர்களின் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். அந்த மாற்றத்தை உணர்ந்தவர்களாக ”தமிழர் ஒருவர் பிரதமர்” ஆக வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள் சிங்கள அரசியல்வாதிகள்….
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி வாட்டி வதைத்தன் எதிரொலி இலங்கையில் இனி எல்லாவற்றையும் புத்தம் புதிதாக தொடங்கவேண்டியதாகிவிட்டது. ராஜபக்சக்களை வார் ஹீரோக்களாக கொண்டாடிய சிங்களர்கள் அவர்களை போர்க்குற்றவாளிகளாக உணரத் தொடங்கிவிட்டார்கள். அதனாலேயே மகிந்த ராஜபக்சவையும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவையும் ஆட்சியிலிருந்து அத்தனை ஆக்ரோஷமாக தூக்கியெறிந்திருக்கிறார்கள்.
இறுதிக்கட்டபோர் உச்சக்கட்ட உக்கிரத்தை காட்டிய மே18ந்தேதி கொண்டாடப்பட வேண்டிய நாள் அல்ல…துக்கம் அணுஷ்டிக்க வேண்டிய நாள் என்பதை சிங்களர்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போர் நடந்து முடிந்த கடந்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த மே மாதம் 18ந்தேதி கொழும்புவில் , இறுதிக்கட்ட போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக சிங்களர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தனது மவுனத்தை கலைத்த சுமீரா குணசேகரா என்கிற அந்த சிங்களர், 2009ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச நிகழ்த்தியது ஒரு அரச பயங்கரவாதம் என்பதை ஒப்புக்கொண்டு தனது உணர்வுகளை பதிவு செய்தார். மனிதநேயம் என்கிற மதத்தில்தான் இனி நாங்கள் அதிக நம்பிக்கைப்போகிறோம் என்று அவர் கூறியது இலங்கை மக்களின் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஒரு உதாரணம்.
அரசியல்வாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு தவறாக கையாளப்பட்ட உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இலங்கையின் பிரபல நடிகை கவுசல்யா பெர்னாண்டோ கூறினார். பல்வேறு இனங்களாக வராமல் இலங்கையின் குடிமக்களாக இங்கு ஒன்றிணைந்துள்ளோம் என்று அவர் கூறியதும் அதிக கவனம் பெற்றது.
இறுதிக்கட்டப்போரின் போது தமிழர்கள் மீது மகிந்த ராஜபக்ச அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித உரிமை மீறல்களை மவுனசாட்சியாக வேடிக்கை பார்த்ததற்கு பிராயச்சித்தம் தேட வேண்டும் என்கிற மன நிலையிலும் சிங்கள மக்கள் உள்ளார்கள். அதிபருக்கு எதிரான போராட்டக்களத்தில் தமிழர்களுக்கு ஆதரவான கருத்துக்களைத் தாங்கிய பதாகைகளை சிங்கள இளைஞர்கள் தாங்கி நின்றது இதனை உணர்த்துவதாகக் கூறுகிறார்கள் இலங்கையின் அரசியல் ஆய்வாளர்கள்.
“இறுதிக்கட்ட போரினால் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக வெற்றி முழக்கமிட்ட ராஜபக்ச சகோதரர்கள், போர் முடிந்து 13 ஆண்டுகளில் சாதித்தது என்ன?…மக்களை பசியிலும், பஞ்சத்திலும் ஆழ்த்தியதுதான் அவர்களின் சாதனையா?” என்று மக்கள் மனதில் எழுந்த கேள்வியே அலரி மாளிகையையே அலறவிடும் அளவிற்கு போராட்டமாக வெடித்தது.
இப்படி மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம் ஒருபுறம் இருக்க, இன்னொரு நிர்பந்தமும் இலங்கைக்கு இருக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச கண்காணிப்பு நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகளின் உதவி கண்டிப்பாக இலங்கைக்கு தேவை. “சர்வதேச சமூகம் செய்யும் உதவிகள், இன, மத வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கிடைக்கும், எல்லோரும் இங்கே சமமாக நடத்தப்படுவார்கள், 2009ம் ஆண்டு நிகழ்ந்தது போன்ற இன ஒழிப்புகள் இனி ஒருபோதும் நிகழாது” என சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய நெருக்கடியும் இலங்கைக்கு தற்போது உள்ளது.
மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடி, சர்வதேச சமூகத்திடம் நன்மதிப்பை பெற வேண்டிய நெருக்கடி என இரண்டு விஷயங்களை இலங்கை அரசும், அந்நாட்டு அரசியல்வாதிகளும் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான் தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற குரல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துவருகிறது. அந்த குரல் சிங்களவர்களின் குரல்களாக இருப்பதுதான் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் கொள்கை விளக்க அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு பேசிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனா, தமிழர் ஒருவரோ, சிங்களர் ஒருவரோ இலங்கையின் பிரதமரானால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்கும் மனநிலை சிங்கள அரசியல்வாதிகளுக்கு வேண்டும் என வலியுறுத்தினார்.
இன, மத, சாதிய வாதங்களுடன் 21ம் நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் இலங்கை முன்னேற முடியாது எனக் கூறிய அவர், இலங்கையில் தமிழர் ஒருவர் பிரதமராகும் சூழ்நிலையை ஏற்படுத்த அனைத்து அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என்றார்.
இந்நிலையில் இன்று மற்றொரு முக்கிய சிங்கள அரசியல்வாதியின் குரலும் தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் வலுவாக எதிரொலித்துள்ளது. இலங்கை பொதுஜனா பெரமுனாவைச் சேர்ந்த டலான் பெரேரா இன்று அதிபர் ரணிலின் கொள்கை விளக்க அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போது, தற்போது உள்ள நெருக்கடியான சூழலில், சர்வதேச சமூகத்திடம் நற்பெயரை வாங்க வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டு உள்ளதாக எடுத்துரைத்தார். புரட்சிக்கரமான, இனவாதம் இல்லாம் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டபடி வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை உருவாக்க வேண்டும் எனக் கூறிய டிலான் பெரேரா, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தமிழர், இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் என்றார். சிங்களர் ஒருவர் அதிபராக முடியுமென்றால் தமிழர் ஒருவர் பிரதமராக முடியாதா? என்று கேள்வி எழுப்பினார். அமெரிக்காவில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா அந்நாட்டின் அதிபரானதையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை அமைப்பதன் மூலம், இனவாத மன நிலையிலிருந்து இலங்கை விடுபட்டுள்ளது என்கிற செய்தியை சர்வதேச நாடுகளுக்கு உணர்த்த முடியும் என்றும் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.
1978ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கையின் மூன்றாவது அரசியல் சாசனத்தின் அட்டவணை மூன்றில் உள்ள ஷரத்து 12 சம உரிமையை பற்றி விவரிக்கிறது. இனம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் குடிமக்கள் யாரையும் பாகுபடுத்தி பார்க்கக் கூடாது என்று அந்த ஷரத்து கூறுகிறது. ஆனால் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு உரிமைகளை கிடைக்கச் செய்யாமல் சிங்கள அரசியல்வாதிகள் தடுத்ததாலேயே இலங்கையில் உள்நாட்டுப்போரே வெடித்தது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் தற்போது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகமாக இருக்குமா, தமிழர் ஒருவர் இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் நாள் வருமா? அப்படி பிரதமர் பதவி கிடைத்தாலும், இலங்கை தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் விரும்பும் அரசியல் தீர்வுக்கு அது போதுமானதாக இருக்குமா என்று அடுத்தடுத்து கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கான பதிலை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.







