ஈரானால் தலைக்கு 3 மில்லியன் டாலர் வெகுமதி என அறிவிக்கப்பட்ட, பின்நவீனத்துவ எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த சல்மான் ருஷ்டி?
ஈரானின் மிக முக்கிய மதத் தலைவரான அயதுல்லா ருஹோல்லா கோமேனி, பிரிட்டனில் வசித்து வந்த சல்மான் ருஷ்டியை கொலை செய்ய வேண்டும் என 1989ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து, ஈரான், பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் தங்களது அரசு உறவுகளை முறித்துக் கொண்டன. இதனால் சல்மான் ருஷ்டி பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இதற்கெல்லாம் காரணம் அவர் எழுதிய ஒரு புத்தகம்.
1947 ஆம் ஆண்டு, பம்பாயில் நெகின் பட், ஆனிஸ் அகமது ருஷ்டி தம்பதிக்குப் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. 14 வயதில் இங்கிலாந்துக்கு கல்வி பயில சென்றவர், கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைத்தது. தனது இஸ்லாமிய மத நம்பிக்கைகளைத் துறந்து நாவல்களை எழுதத் தொடங்கினார். 1975ம் ஆண்டு, க்ரிமஸ் என்கிற முதல் நாவலை வெளியிட்டார். பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், இலக்கிய உலகில் தன் இருப்பை தக்க வைக்க க்ரிமஸ் நாவல் அவருக்கு உதவியது.
தனது இரண்டாவது புத்தகமான மிட்நைட்ஸ் சில்ட்ரன் (‘Midnight’s Children’ (1981)) பரவலாகப் பாராட்டப்பட்டு புக்கர் பரிசையும் வென்றது. 5 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்த மிட்நைட்ஸ் சில்ட்ரன் இந்தியாவைப் பற்றிய கதை. 1983ல் வெளியான அடுத்த நாவலான ‘ஷேம்’ பாகிஸ்தானைப் பற்றியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ருஷ்டி நிகரகுவா நாட்டு பயணத்தைப் பற்றிய ‘தி ஜாகுவார் ஸ்மைல்’ நாவலை எழுதினார். இவரது புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவையாகவும், அதே நேரம் சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தன.
அப்படி செப்டம்பர் 1988ஆம் ஆண்டு, சல்மான் ருஷ்டி எழுதிய ’தி சாத்தானிக் வெர்சஸ்’
(‘The Satanic Verses’) என்ற பின்-நவீனத்துவ நாவல், அதுவரை அவரது எந்தப் புத்தகமும் சந்திக்காத அளவு பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. உலக அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் இந்நாவல் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாவல் தங்களது மதத்தை அவமதிப்பதாக இஸ்லாமியர்கள் கருதினர்.
இந்தியா, அந்த புத்தகத்திற்கு முதல் தடையை விதித்தது. அதன் பிறகு பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் இந்தப் புத்தகத்தை தடை செய்தன. சல்மான் ருஷ்டிக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கின. ருஷ்டியை கொலை செய்பவர்களுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்குவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த காலத்தில் சல்மான் ருஷ்டியை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால், பிரட்டனுடனான அரசு ரீதியான உறவை ஈரான் முறித்துக் கொண்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை ருஷ்டி நிராகரித்தார். இது கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
ருஷ்டிக்கு எதிராக நடந்த கலவரங்களில் மக்கள் சிலரும் கொல்லப்பட்டனர். ஈரானில் இருந்த பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டது. இதையடுத்து ருஷ்டி தனது மனைவியுடன் போலீஸ் பாதுகாப்பில் தலைமறைவாக வாழத் தொடங்கினார்.
1991ஆம் ஆண்டு ஜூலையில் ருஷ்டியின் புத்தகத்தை ஜப்பானில் மொழி பெயர்த்த ஹிடோஷி, கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இத்தாலிய மொழிபெயர்ப்பாளரான எட்டோர் கேப்ரியோலோவை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி நடந்தது. இத்தனை களேபரங்களுக்கு பிறகு, 1998ஆம் ஆண்டில் ஈரான் அரசு மனம் மாறியது. ருஷ்டிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை விலக்கிக் கொண்டது.
அதன் பிறகு ஹாரூன் அண்ட் ’தி சீ ஆஃப் ஸ்டோரிஸ்’ , இமேஜினரி ஹோம்லேண்ட்ஸ், தி மூர்ஸ் லாஸ்ட் சை (‘The Moor’s Last Sigh’), தி கிரவுண்ட் உள்ளிட்ட புத்தகங்களை ருஷ்டி எழுதினார். நான்கு திருமணங்கள் செய்து கொண்ட ருஷ்டிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக அவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். இலக்கிய சேவைக்காக 2007ஆம் ஆண்டில் அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டில், ‘The Satanic Verses’ பற்றிய சர்ச்சையை ஒட்டிய தனது வாழ்க்கையின் நினைவுகளைப் புத்தகமாக வெளியிட்டார்.
இந்த நிலையில்தான், அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில், நடந்த நிகழ்ச்சியில், சொற்பொழிவாற்ற வந்த, சல்மான் ருஷ்டியை, 24 வயதான இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான சல்மான் ருஷ்டிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் ஒரு கண் பார்வையை இழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








