இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாடு – முடங்கிய போக்குவரத்து

இலங்கையில் பெட்ரோல் பற்றாக்குறை நிலவுவதால் அந்நாட்டில் போக்குவரத்து ஏறக்குறைய முடங்கியுள்ளது.   கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இலங்கையில், மக்களின் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமாகிக்…

இலங்கையில் பெட்ரோல் பற்றாக்குறை நிலவுவதால் அந்நாட்டில் போக்குவரத்து ஏறக்குறைய முடங்கியுள்ளது.

 

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இலங்கையில், மக்களின் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இலங்கைக்குத் தேவையான உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசிடம் போதிய பணம் இல்லாததால் இறக்குமதி வெகுவாக குறைந்துவிட்டது.

குறிப்பாக கச்சா எண்ணெய் தேவையான அளவு இறக்குமதி செய்ய பணம் இல்லாததால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

தற்போது இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் / டீசலின் விலை ரூ.450க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையில் 12,774 டன் டீசல் மற்றும் 4,061 டன் பெட்ரோல் மட்டுமே இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் விஜேசேகர, இது நாட்டின் ஒருநாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் மத்திய வங்கி 125 மில்லியன் டாலர்களை மட்டுமே விடுவித்துள்ளது என தெரிவித்துள்ள அவர், இதனைக் கொண்டு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த கச்சா எண்ணெய் இம்மாதம் 22 அல்லது 23ம் தேதிதான் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை இலங்கை கடந்த வாரம் நிறுத்தியது. அதோடு, அடுத்த வாரம் வரை தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை காரணமாக இலங்கையில் வாகன போக்குவரத்து ஏறக்குறைய முடங்கிய நிலையில் உள்ளது.

1970களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி காரணமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, அத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ள முதல் நாடாக இலங்கை தற்போது உருவெடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.