தொழில்துறையில் ஓராண்டிற்குள் இமாலய சாதனை- முதலமைச்சர்

திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் தமிழ்நாடு தொழில்துறையில் இமாலய சாதனை அடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.  முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில்,…

திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் தமிழ்நாடு தொழில்துறையில் இமாலய சாதனை அடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். 

முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்துறை பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

60 ஒப்பந்தங்கள் 

இந்நிகழ்ச்சியின் போது, புதிய திட்டங்களுக்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் ஏற்கனவே பணிகள் நிறைவடைந்திருந்த 12 திட்டங்களின் வணிக உற்பத்தியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிதிநுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், 74,898 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முதலமைச்சர் உரை 

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்பது வரலாற்று சாதனை. இது இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய நற்சான்றிதழ். ஓராண்டிற்குள்ளாகவே இமாலய சாதனையை நாம் அடைந்திருக்கிறோம். இதற்கு காரணமான தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அமைச்சரவையில் அவருக்கு துறை வழங்குவது தொடர்பாக சிந்தித்த போது தொழிற்துறையை தேர்ந்தெடுத்தேன். துணிச்சலாக செயல்படக்கூடிய தங்கம் தென்னரசு பெயரை டிக் செய்தேன். தொழில்துறையை தங்கமாக மாற்றியவர் தங்கம் தென்னரசு தான் என்று பாராட்டினார்.

மேலும், தமிழ்நாடு அரசு மீது அபார நம்பிக்கை வைத்து தொழில் நிறுவனங்கள் முன் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், தொழில் திட்டங்களுக்கு தேவையான அனுமதிகளை பெறவும், சிறக்கவும் உறுதி தர கடமைப்பட்டுள்ளேன் என்றார். அதுபோல், ஆன்லைன் விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும், அந்த வளர்ச்சியை பயன்படுத்தி நாமும் வளரவேண்டும் எனவும்,  நிதி நுட்ப நகரம் படிப்படியாக கட்டமைக்கப்படவுள்ளது என்று கூறினார்.

ஸ்மார்ட் மாநிலமாக்க வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் தமிழ்நாட்டை ஸ்மார்ட் மாநிலமாக்க வேண்டும். பரிணாம வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்திற்கும் தான். திமுக அரசு எடுத்த முயற்சியினால் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இருமடங்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என அன்பு கட்டளையிட்டேன்.அதன்படி ரூ.2,20,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இது 2.5 மடங்கு அதிகமாகும் என்று கூறினார்.

மேலும், தமிழ்நாடு தொழில்துறையில் மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு வருவோம் என கூறிய அவர், அதற்கான திட்டமிடலை தொடங்கி விட்டதாகவும், 68 சதவீத முதலீடுகள் தென்மாவட்டங்களில் அமையவுள்ளதாகவும் தெரிவித்ததோடு, சமூக நீதி மாநிலமான தமிழ்நாடு, தொழில்துறையில் சிறந்த தமிழ்நாடாக உயர வேண்டும் எனவும் கூறினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு 

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓராண்டிற்கு முன்பு ஜூலை மாதத்தில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்ற தலைப்பில் முதல் மாநாடு நடைபெற்றது. முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே முதலீடுகளுக்கு காரணம் ஆகும்.

கொரோனா பெருந்தோற்றில் இந்தியாவில் பொருளாதாரம் Negative Growthஇல் சென்றபோது, Positive Growthஇல் இருந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீட்டாக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் முதலீடுகள் சேர வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். திறன்மிகு பணியாளர்களை உருவாக்கும் வகையில் பணியக ஆய்வகங்களை தொழில்துறை மேற்கொண்டிருக்கிறது என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.