பெண் என்பதற்காகவே கொல்லப்படும் ஸ்ரத்தாக்கள்

காவியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி.  செல்லமாகவும் செல்வமாகவும் வளர்க்கப்பட்ட பெண் . திருமணத்திற்கு முன்பு வரை வெளி உலகம் அறியாமல் தன்னுடைய சிறிய கிராமத்தில் உள்ள வீடு மற்றும் படித்த…

காவியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி.  செல்லமாகவும் செல்வமாகவும் வளர்க்கப்பட்ட பெண் . திருமணத்திற்கு முன்பு வரை வெளி உலகம் அறியாமல் தன்னுடைய சிறிய கிராமத்தில் உள்ள வீடு மற்றும் படித்த கல்வி நிறுவனங்களை தவிர வேறு எங்கும் சென்றதில்லை. உறவினர்கள் வீடுகளுக்கு கூட பெரிய அளவில் சென்றதில்லை.  பெண்களை படிக்க வைத்தாலும் மற்ற பெண்கள் குறித்த விஷயங்களில் ஊரே சற்று எழுதப்படாத கட்டுப்பாடுகளை கொண்டது.  சில நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வருவது என்று குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்த காவியாவிற்கும் , ஹைதராபாத்தைச் சேர்ந்த சித்தார்த்திற்கும் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) திருமணம் நடைபெற்றது. புது இடம், புது மனிதர்கள் என சற்று அச்சத்துடன் சித்தார்த்தின் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார் காவியா.
திருமணத்திற்கு பிறகு தனது சக தோழிகளை போல கணவருடன் வெளியே செல்லலாம். புது வாழ்வை புத்துணர்வோடு தொடங்க நினைத்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது . ஊர் புதிது, தெலுங்கு மொழி புதிது இவை எல்லாவற்றையும் விட  காவியாவின் கணவர் சித்தார்த்தும், அவரது குடும்பமும் காவியாவை நடத்திய விதமும் புதிதாகத்தான் இருந்தது . வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிட வேண்டும், அசைவம் நன்று சாப்பிட்டு வளர்ந்த காவியாவிற்கு அசைவமே சமைக்காமல் இருக்கும் கணவன் வீட்டு உணவு பழக்கத்தை புரிந்துக் கொள்ளவே குழப்பமாக இருந்தது.  4 பேர் உறுப்பினர்களாக கொண்ட வீட்டில் எப்போதும் 3 பேர் அளவிற்கே சமைத்தனர். கடைசியாக சாப்பிடும் காவியாவிற்கு போதிய அளவிற்கு உணவு கூட சரியாக கிடைக்காது. இல்லை என்றால் குறைந்தளவே சாப்பாடே சாப்பிடும் நிலை தான் இருந்தது.
திருமணம் முடிந்த சில நாட்களிலயே காவியாவை வேலைக்கு போக சொல்லி கணவர் சித்தார்த், தனது பெற்றோருடன் சேர்ந்து வற்புறுத்தினார். காவியா படித்த படிப்பிற்கு ஹைதராபாத்தில் நல்ல வேலை கிடைக்கும். ஆனால் காவியா கொஞ்சம், ஊர் மற்றும் மொழி குறித்த புரிதலுக்கு பிறகு வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தார். தொடர்ந்து அவரது கணவர் குடும்பம் வேலைக்கு காவியாவை அனுப்புவதிலேயே  குறியாக இருந்தனர்.  ஆரம்பத்தில் சற்று பொறுத்துக் கொண்டிருந்தார் காவியா. பிறகு சித்தார்த் வீட்டில் நடக்கும் சிறு சிறு பிரச்னைகளுக்கு கூட காவியா வந்த நேரம் என்று பேச ஆரம்பித்தனர் .  இல்லற வாழ்விலும் காவியாவின் கணவர் ஆர்வம் காண்பிக்கவில்லை. வெளியே எங்கேயும் அழைத்துச் செல்வதும் கிடையாது. காலையில் வீட்டை விட்டு கிளம்பிப் போகும் கணவர் இரவு தான் வீடு திரும்புவார். பகல் முழுவதும் தனியாக இருக்கும் காவியாவிற்கு ஒரு போன் செய்து  கூட அலுவலகத்தில் இருந்து பேச மாட்டார்.
காவியாவின் மாமியாரும், மாமனாரும் தொடர்ந்து காவியாவை திட்டிக் கொண்டிருக்க  காவியா அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். நீ வேலைக்கு போவது தான் அவர்கள் பிரச்சினை என்றால், இப்போதைக்கு உனக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள மாதம் மாதம் பணம் அனுப்புகிறோம் என்று சொல்லி சமாளித்தனர். ஆனால் காவியாவின் கணவரோ, என்னை உங்கள் குடும்பம் அவமானப்படுத்துகிறது என்று அதற்கும் சண்டையிட்டார் .
இந்த பிரச்சினை நீள காவியாவையும் அவரது கணவரையும் தனி குடித்தனம் வைத்தால் சற்று பிரச்சினை தீரும் என்று எண்ணி தனிக் குடித்தனம் வைத்தனர். ஆனால் அப்போதும் சித்தார்த் தனி வீட்டுக்கு விருந்தாளி போல் தான் வந்து சென்றார் . அவரது உடைகள் ,பொருட்கள் எதையும் அவரது பெற்றோர் வீட்டிலிருந்து எடுத்து வரவில்லை.  காவியா சமைப்பதை சாப்பிடுவதும் இல்லை. இரவு தூங்க வருவார் . காலையில் எழுந்தவுடன் அவரது அம்மா வீட்டுக்கு செல்வதாக இருந்தது. காவியாவின் தந்தை அவரது ஏடிஎம் கார்டுகளில் ஒன்றை காவியாவிடம் கொடுத்து வைத்திருந்தார் . “உனக்கு தேவையான பொருட்களை நீ வாங்கிக் கொள். உனக்கு சாப்பிட பிடித்ததை வாங்கி சாப்பிடு” என்று சொல்லி தான்   கார்டை கொடுத்திருந்தார். ஒரு நாள் அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டதை அறிந்த சித்தார்த் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் காவியாவின் போனை வாங்கி பார்த்து என்னை ஆர்டர் பண்ணி இன்று சாப்பிட்டாய் என்று கேட்க ஆரம்பித்தவர் காவியாவிடம் இருந்த அவரது அப்பாவின் ஏடிஎம் கார்டை வாங்கி உடைத்து போட்டார் . இல்லற வாழ்க்கையின் அடிப்படைப் பண்பான, அன்பாக வாழ மறுப்பதோடு, கேள்வி மேல் கேள்வி கேள்வி கேட்பதே, ஒரு கட்டத்தில் காவியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்தியது. அதனால் பிடித்த உணவை வாங்கி சாப்பிடுவதையும் நிறுத்திக் கொண்டார்.  வீட்டிற்கு உங்கள் அம்மா ,அப்பா வரக் கூடாது என்று கட்டளையிட்டார் சித்தார்த். தனது அப்பா, அம்மாவைக் கூட வீட்டிற்கு வரக் கூடாது என்று சொன்னவுடன் காவியா தனது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார். அப்போது சித்தார்த், காவியாவை அடித்து , கழுத்தை நெறித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் உடலாலும், மனதாலும் நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் காவியா.  ஒரு கட்டத்தில், இப்படியும் ஒரு வாழ்க்கை தேவையா என்ற மனநிலைக்கு  வந்த காவியா, பொறுத்தது போதும் என்று  கிளம்பி அவரது பெற்றோர் வீட்டுக்கு திரும்பிவிட்டார். காவியாவிற்கு நடந்தது போன்று  பெண்கள் மீது நடத்தப்படும் குரூர எண்ணம் கொண்ட வன்முறைகள் கணக்கிலேயே வருவதில்லை.

மேலோட்டமாக பார்த்தால் இதில் ஒன்றும் பெரிய சிக்கல் இல்லை என்பது போல் தோன்றும் .  தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்தால் தான் குடும்ப வன்முறை அல்ல.  பேசாமல் , தன்னை ஒரு பொருட்டாக நினைக்காமல், நல்ல உணவுக்கு கூட ஏங்கும் நிலையில் பெண்களை தள்ளினால் அதுவும் குடும்ப வன்முறை தான் . வீட்டிலிருக்கும் சக மனுஷியை மதித்து பேசாமல் நிராகரிப்பதும் ஒரு கணவருக்கான எந்த பொறுப்பும் இல்லாமல் அவளை நிர்க்கதியாக விடுவதும் வன்முறை தான் . இப்படியான குரூரமாக அரங்கேறும் வன்முறைகளை பெண்கள் சொல்வதே இல்லை. பெரும்பாலும் இது போகப் போக சரியாகும் சரியாகும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் மனிதியாக மதிக்காத ஒரு நபருடன் எப்படி தன் வாழ்வின் சுகதுக்கங்களை பகிர்வது என்பது மிகப் பெரிய கேள்வி . இயந்திரத்தனமான இந்த வாழ்க்கைக்கு குடும்பத்திற்காக , உறவுகளுக்காக என்று பழகிக் கொள்கிறார்கள் பெரும்பாலான பெண்கள் . இது போன்ற குரூர எண்ணத்துடன்  நடந்தேறும் வன்முறைகள்  குறித்து சட்டங்களில் இன்னும் தெளிவில்லை.  அது தான் இந்த  குரூரமான எண்ணம் கொண்ட வன்முறையை கையில் எடுக்கும் ஆண்களுக்கு பெரிய அளவில் உதவுகிறது.  இப்படியான வன்முறைகள் தொடங்கி அடித்தல், உதைத்தல் ,அவமானப்படுத்துதல் என பல வழிகளில்  பெண்கள் தங்களது கணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் வன்முறைக்கு ஆளாகிறார்கள் .இது ஒரு புறம் என்றால், காதலித்து ஒன்றாக குடும்பம் நடத்திய காதலியை கொன்று அவரது உடலை கண்டம் துண்டமாக வெட்டி நாள் கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தி அதனை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்த  அஃப்தாப், ஷ்ரத்தா வாக்கர் (Shraddha Walker)  சம்பவம் இந்தியாவை குலை நடுங்க வைத்துள்ளது. இவ்வளவுக்கும்  2020 ம் ஆண்டே அஃப்தாப் மீது ஸ்ரத்தா வாக்கர்  காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் . பெற்றோரை எதிர்த்து லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் அஃப்தாப் அடித்தது, வெட்டிக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியது என எல்லாவற்றையும் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறார் . ஆனாலும் யாரும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லையோ என்பது தான் இப்போது அவரது கொலை உணர்த்தும் செய்தி.

ஒருபக்கம் காவியாக்களும், ஸ்ரத்தாக்களும் இப்படியான வன்முறைகளுக்கு உள்ளாவது என்பது காலம் காலமாக நடந்தேறுகிற ஒன்று. பெண்களை பாதிப்புக்குள்ளாக்குவதில் ஆண்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்த வேறுபாடும் இல்லை.  அரசியல் அறிவு சார்ந்தவர், முற்போக்கு சிந்தனை உடையவர், உயர் பொறுப்புகளில் பணியில் இருப்பவர் , பொருளாதாரத்தில் மேம்பட்டு இருப்பவர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பெண்கள் உரிமை குறித்து எழுதும்  ஆண்கள் என பலதரப்பட்டவர்களும், படிநிலையில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களும்  கூட   தங்கள் மனைவி , காதலி என்று வரும்போது  அவர்களுக்குள் இருக்கும் ஆண் என்ற கர்வம் எட்டிப்பார்ப்பதை கண்கூடாக நாம் இந்த சமூகத்தில் செய்திகளின் வாயிலாக நாள்தோறும் படிக்கிறோம்.
தான் ஒரு ஆண் என்பதும், எதிரே இருப்பவர் ஒரு பெண் என்பதும் மட்டுமே  பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு  போதுமான காரணமாக இருக்கிறது. லிவிங் டுகெதர் வழக்குகளில் சட்டரீதியாக இன்னும் பெரியளவில் தெளிவில்லை.  பெற்றோர்களின் சம்மதத்துடன், அங்கீகரிக்கப்பட்ட சட்ட ரீதியான திருமணம் செய்த பெண்களே இன்றைக்கு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்காமல் நீதிமன்ற படிகட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள் . அப்படி என்றால் பெற்றோர்கள் கைவிடப்பட்டு காதல் திருமணம், லிவிங்டுகெதர் போன்ற வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் பெண்களின் நிலையோ இன்னும் மோசமாக இருக்கிறது. அவர்களுக்கு சட்டமும் சில நேரங்களில் துணைக்கு வருவதில்லை.    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் காதல் திருமணம் அல்லது லிவிங் டுகெதர் போன்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் சாதி, மதம் , உறவுக்காக  ஒதுக்கி வைக்காமல் இருந்தால் குறைந்தது அந்த பெண்ணுக்கு வன்முறைகள் நேரும் போது பாதுகாக்க உதவும். ஆனால் இன்னும் பெற்றோர்கள்  தங்களது பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதற்கும்,  தங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை. அதே போல் பெண்களும் திருமணத்திற்கு தயாராவது போல் விவாகரத்துக்கும் மனதளவில் தயாராவது இல்லை. விவாகரத்து என்றாலே பெண்கள் தவறு செய்துவிட்டதாக எண்ணிவிடுவார்களோ என்று எண்ணியே சில பெண்கள் விவாகரத்து நோக்கி நகராமல் தினமும் கணவனின் வன்முறைக்கு அடங்கிப் போகிறார்கள் . 
கணவனிடமிருந்து,  “முதல் அடி வரும்போது ஒன்று திருப்பி அடிக்க பெண்கள் பழக வேண்டும் அல்லது கடுமையாக கண்டிக்க வேண்டும். ஆனால் பெண்கள் கணவன்களிடம் அடியை வாங்கிக் கொண்டு ஆரம்பத்தில் காலம் தள்ளுவது தான் பிறகு கொலை அளவுக்கு ஆண்களுக்கு துணிவை ஏற்படுத்துகிறது. காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான இடம் என்பது போய் நம்வீட்டு பிள்ளையை போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்வதா, நீதிமன்றம் வழக்கு எல்லாம்  நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது என்று நினைக்கும் பெற்றோர்கள் ஒரு புறம். காவல்நிலையம் , நீதிமன்றங்களுக்கு செல்வது என்பது அவரவர் உரிமை என்பது போய், குடும்பப் பிரச்னைக்காக  இத்தகைய இடங்களுக்கு செல்வதே அவமானத்துக்குரியது என்று எண்ணி பெரும்பாலான பெற்றோர்கள் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்கிற மனநிலைக்கு செல்கிறார்கள்.  இவை தான் ஆண்கள் அதிகம்  தவறு செய்வதற்கான சாதகமான சூழலாக மாறிவிடுகிறது.
மூன்றில் ஒரு பெண் இந்தியாவில் கணவர்களின் தாக்குதல் உடல்ரீதியாக, பாலியல் ரிதீயாக தாக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.  பெண்கள் மீதான குடும்ப வன்முறையில் முன்னேறிய மாநிலங்கள், பின் தங்கிய மாநிலங்கள் என்ற கணக்கெல்லாம் இல்லை. குடும்ப வன்முறைகள் அனைத்து மாநிலங்களிலும் அரங்கேறுகின்றன. இந்தியாவிலேயே அதிகபட்சமாக கர்நாடகாவில் தான் 44 % குடும்ப வன்முறை நடைபெறுவதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. அதையடுத்து பீகார் 40 % ,மணிப்பூர் 40%, தமிழ்நாடு 38%, தெலுங்கானா 37% , உத்தர பிரதேசம் 35 % குடும்ப வன்முறை வழக்குகள் 2019 ம் ஆண்டிலிருந்து 2021 ம் ஆண்டு வரை பதிவாகியதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  அதுவும் கொரோனா பெருந்தொற்றையொட்டி ஊரடங்கு  காலங்களில் தான் அதிக குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகின.  நகர் புறங்களில் 24 % உள்ள குடும்ப வன்முறை  ஊரக பகுதிகளில்  32% அதிகரித்து உள்ளன.
இந்த பட்டியலில் பெண்களை குடும்ப வன்முறைக்கு உள்ளாக்குவதில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகாத கணவன்களும் அடக்கம் என்பது தான் இன்னும் வேதனை.  77 %  பெண்கள் தங்கள் கணவரின் தாக்குதலை வெளியே யாரிடமும் கூறுவதில்லை, வன்முறையில் கணவன் ஈடுபடும் போது உதவிக்கு கூட யாரையும் அழைப்பதில்லை என்கின்றன இந்த ஆய்வுகள் .  18 வயது முதல் 49 வயது வரை  திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் குடும்ப வன்முறையை அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொள்வதில்லை என்ற தகவல் திருமணத்திற்கு பிறகே பெண்கள் மீது அதிக வன்முறை நிகழ்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது.  இந்த ஆய்வுகளை புதியதாக திருமணமான பெண்கள், திருமணமாகி பல ஆண்டுகள்  ஆன பெண்கள் , படித்த பெண்கள், கல்வியறிவற்ற பெண்கள், வேலைக்கு போகும் பெண்கள், வீட்டிலயே இருக்கும் பெண்கள், கணவனை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்று தனித்து வாழும் பெண்கள் என வகைப்படுத்தி, இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில எடுக்கப்படுகிற திரைப்படங்கள் அனைத்தும் காதலை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. காதலுக்கு பின்னான அவர்களது திருமண வாழ்க்கையை எதிர்கொள்வதை படமாக்குவதே இல்லை.  அப்படியே “Thappad”, “The great indian kitchen”, “இறைவி”, “தரமணி”, “Ammu”, “Jaya jaya jaya jaya hey”‘, “Darlings” மாதிரி வெகு சில படங்களே பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை, குடும்ப வன்முறைகளை பேசுகிறது. இத்தகைய படங்களுடன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு சற்று தைரியம் கிடைக்கும். ஆண்களுக்கும்  பிற்போக்கு தனமான பழக்கங்களில் இருந்து வெளியே வர உதவும்.
இந்தியாவில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளும், வழக்குக்கு வழக்கு மாறுபட்ட தீர்ப்பை கொண்டிருக்கிறது. கணவனாகவே இருந்தாலும் மனைவியின் அனுமதி இல்லாமல் அவளை தொட்டால், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினால் குற்றம் என்று ஒரு தீர்ப்பு. மற்றொரு புறம் கணவன் மனைவியை தொட்டால் தவறில்லை என்று வரும் தீர்ப்பு, திருமணம்  செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றினால் தவறு என ஒரு தீர்ப்பு. திருமணம், சத்தியத்தை நம்பி பெண்கள்,   ஆண்களுடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்று மற்றொரு தீர்ப்பு. இப்படி வழக்குக்கு வழக்கு தீர்ப்புகள் மாறுபடுகின்றன . அதனால் நீதிபதிகள் குடும்ப வன்முறை வழக்குகளில் தீர்ப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியம்.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் குடும்ப வன்முறைகள் தொடர்பான வழக்குகளும், விவாகரத்து வழக்குகளும் லட்சக்கணக்கில் தேங்கி இருக்கின்றன. அவற்றை விரைவில் முடிக்க எத்தனை மகளிர் நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள் அமைத்தாலும் முடிவதில்லை. நேரடியாகவும், மறைமுகமாகவும்  இதுபோன்ற   காரணிகள் கூட ஆண்களுக்கு தான் சாதகமாக இருக்கிறது. சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை போன்ற பழமொழிகள் தொடங்கி ஆண்கள் அழக் கூடாது, ஆண்கள் எப்போதும் வலிமையானவர்கள் என்பதை உணர்த்தக் கூடிய பொது சமூகத்தில் உறைந்திருக்கும் உணர்வுகள், எண்ணங்கள் தான் சில நேரங்களில் ஆண்களை இத்தகைய தவறுகள் செய்யவைக்க  காரணமாக அமைகிறது. தன்னுடன் வாழ்பவரும் சக மனிதர் தான். அவருக்கும் உணர்வுகள் இருக்கிறது.  அடித்தால் திருப்பி அடிக்கக் கூடிய தெம்பும் இருக்கிறது. ஆனால் அதனை அவர் மீறாததற்கு அன்பு, குடும்ப கட்டமைப்பு உள்ளிட்டவை தான் காரணம் என்பதை இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஆண்கள் இந்த நேரத்தில் உணர்தல் அவசியம்.  தவறு யார் செய்தாலும் தவறு தான்.  தவறு செய்தவர்கள் உடனடியாக திருந்தி, அதற்கு வருந்தி, ஒருவருக்கு ஒருவர் புரிந்து, வாழ்ந்தால் மட்டுமே குடும்ப வன்முறைகள் பெருகாமல் குறையும்.  இப்படி எதார்த்தத்தை உணர்த்தும் வாழ்வியலுக்கு சிறு வயதிலிருந்தே ஆண் பிள்ளைகளை பழக்கினால், வருங்காலத்தில் குடும்ப வன்முறைகளை குறைக்க உதவும்.
  • சுகிதா சாரங்கராஜ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.