12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டி : நாளை தொடக்கம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வணிக வளாகத்தில் நாளை (13) முதல் வருகிற 17-ஆம் தேதி வரை ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வணிக வளாகத்தில் நாளை (13) முதல் வருகிற 17-ஆம் தேதி வரை ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஸ்குவாஷ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன

இதில் இந்தியா ,ஹாங்காங், சீனா, ஜப்பான், எகிப்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா, கொலம்பியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் துவக்க விழா நிகழ்ச்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்திய அணி இந்த தொடரின் இரண்டாவது சீட் (SEED) அணியாக களமிறங்கி விளையாடுகிறது. இந்தியா அணியில் தமிழ்நாடு வீராங்கனையும், இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜோஷ்னா சின்னப்பா, இந்தியாவின் இரண்டாம் நிலை வீராங்கனை தான்வி கண்ணா, இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் சவுரவ் கோஷல், தமிழக வீரர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது நிலை வீரரான அபய் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இந்த போட்டி நடைபெற உள்ளது. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட உள்ள நிலையில் ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஏ பிரிவில் எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மலேசியா அணிகளும், B பிரிவில் இந்தியா, ஜப்பான், தென்னாபிரிக்கா மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.13,14 ,15 ஆகிய மூன்று நாட்களில் லீக் போட்டிகளும் பதினாறாம் தேதி அரையிறுதி போட்டிகள் 17ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.