முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை , சென்னை மாவட்ட…

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை , சென்னை மாவட்ட பிரிவின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்களை நடத்துகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக பொதுப்பிரிவு ,பள்ளி ,கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளுக்கும், மற்ற பிரிவுகளில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடைபெறுகிறது. மாநில அளவிலான போட்டி மே மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கு மொத்தமாக 25 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.

இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் நடைபெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மே தின பூங்கா மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கால்பந்து போட்டி, பொதுபிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி மற்றும் இறகு பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகர் கண்ணதாசன் மைதானத்தில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான கூடை பந்து போட்டி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சிலம்பம் போட்டி, அரசு ஊழியர்களுக்கான சதுரங்க போட்டி உள்ளிட்டவற்றை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.