குரூப் 2, 2ஏ தேர்வில் கவனம் ஈர்த்த 5 கேள்விகள்!

இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 5 கேள்விகள் கவனம் ஈர்த்துள்ளன. தமிழ்நாடு அரசில் குரூப் 2, 2ஏ பிரிவில் சார்பதிவாளர், வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள…

இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 5 கேள்விகள் கவனம் ஈர்த்துள்ளன.

தமிழ்நாடு அரசில் குரூப் 2, 2ஏ பிரிவில் சார்பதிவாளர், வேலைவாய்ப்பு அலுவலர்,
நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்ப இன்று முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. 200 கேள்விகளுக்கு Objective Type-ல் விடையளிக்கும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இன்றைய வினாத்தாள் எளிதாக இருந்ததாகவும், முந்தைய தேர்வுகளை விட சற்று
மேம்பட்ட முறையில் UPSC தேர்வுகளுக்கு இணையான தரத்தில் வினாத்தாள்
இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் இன்றைய தேர்வில் தமிழ்நாடு அரசின் அண்மைக்கால பயன்பாடான “ஒன்றியம்” என்ற வார்த்தைப் பதமும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. Union Territory என்பதற்கான மொழிபெயர்ப்பில் ஒன்றிய பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கமாக முந்தைய தேர்வுகளில் Union Territory என்பது யூனியன் பிரதேசம் என்றே
குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், இப்போது ஒன்றிய பிரதேசம் என்று
குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

இன்றைய குரூப் 2, 2ஏ தேர்வில் கவனம் ஈர்த்த கேள்விகள்:

அடுத்ததாக பள்ளிக் கல்வித் துறையின் ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமே
பயன்படுத்தும் அலுவல் சார் இணையதளமான EMIS தளத்தின் பயன்பாடு குறித்தும்
கேள்வி இடம்பெற்றிருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பின் 2021-ல் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர்
முருகேசன் ஆணையம் எதற்காக உருவாக்கப்பட்டது என்ற கேள்வியும், கோவிட் 19
காரணமாக ஏற்பட்ட சூழலில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021-ல் GDP-ல்
எத்தனை சதவீதத்துக்கு மேம்படுத்தப்பட்டது என்ற கேள்வியும், தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு குறித்த
கேள்வியும் கவனம் ஈர்த்துள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்பதே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட
மேம்பாட்டு வாரியம் என்று கடந்த ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில்,
பெயர் மாற்றம் பற்றி குறிப்பிடாமல் நேரடியாக உருவாக்கப்பட்ட ஆண்டு குறித்து
கேள்வி கேட்கப்பட்டிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக தேர்வர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர். இது தவிர இன்றைய தேர்வில் பெண்களுக்கே அதிக வாய்ப்பு தரப்பட்டதாக ஆண் தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நியூஸ் 7 தமிழிடம் பேசிய தேர்வர் திருக்குமரன், இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ
தேர்விலும், TNPSC நடத்தும் இதர தேர்வுகளிலும் பெண்களுக்கே அதிக இட ஒதுக்கீடு
வழங்கப்படுவதாகவும், பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலும் பெண்கள் அதிக அளவில் பலனடைவதால் ஆண்களுக்கான வாய்ப்பு பறிபோவதாகவும் வேதனை தெரிவித்தார்.

பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடை உள் இட ஒதுக்கீடாக வழங்கினால் ஆண்கள்
பாதிப்படையாமல் தவிர்க்கலாம் என்றும் அரசுக்குத் தேர்வர்கள் யோசனை
தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.