சென்னையில் எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் மற்றும் விருதுநகரில் ஒப்பந்ததாரர் செய்யாதுரை ஆகியோர் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை தலைமையிடமாக வைத்து எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம், கமுதி தாலுகாவில் உள்ள கீழமுடி மன்னார் கோட்டையைச் சேர்ந்தவர்; எஸ்.பி.கே., நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை. இவருக்கு, ஈஸ்வரன், நாகராஜன், பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மீது வருமான வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து, அருப்புக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகம், ராமநாதபுரத்தில் உள்ள உரிமையாளர் வீடு, சென்னையில், தி.நகரில் உள்ள அலுவலகம், நாகராஜன் வீடு, உறவினர் தீபக் வீடு உட்பட, 12 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் காலை முதல் சோதனையை தொடங்கினர். சோதனையில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய, 7க்கும் மேற்பட்ட இடங்களில் சென்னையில், வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் எஸ்.பி.கே., நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், சென்னை உட்பட தமிழகம் முழுதும் 12 இடங்களுக்கு மேல் வரி சோதனை நடந்தது.
இதே போல, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் வரி சோதனை நடந்தது. மொத்தம், தமிழகத்தில் 45க்கும் மேற்பட்ட இடங்களில் வரி சோதனை நடந்து வருகிறது.
இரு வேறு இடங்களில் தனித்தனிக் குழுக்களாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல எஸ்.பி.கே. நிறுவனத்திற்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் வேறு ஏதும் தொடர்பு இருக்கிறதா என்கிற அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








