செல்போன் பயன்பாடு வருவதற்கு முன்பு, கடிதங்களே மக்களுக்கு மகத்தான தகவல் சேவை புரிந்துள்ளது. உலக தபால் தினமான இன்று, அதன் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்…
1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி, சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில், சர்வதேச தபால் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே, உலக தபால் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட மொத்தம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பாரீஸ் நகரில் 1653-ம் ஆண்டு தபால் பெட்டிகள் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்டர்நெட், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என தொடரும் நவீன தொழில்நுட்பங்களால், உலகமே கையடக்க செல்போனுக்குள் சுருங்கிவிட்ட நிலையில், தகவல் தொடர்புக்கு ஒரு காலத்தில் பலரும் தபால்காரரை எதிர்பார்த்து காத்திருந்த காலம் ஒன்று உண்டு. தேர்வு முடிவுகள், வேலைவாய்ப்பு கடிதம் போன்றவற்றுக்காக பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் மணிக்கணக்கில், நாட்கணக்கில் காத்திருந்த காலமும் இருந்தது.
கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு செல்லும் பேரக்குழந்தைகள், திருமணம், குழந்தை பிறப்பு, கோயில் திருவிழா என அனைத்திற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவிக்க தபால்களே பயன்படுத்தப்பட்டன. காதலை தெரிவிக்க இளைஞர்கள் பயன்படுத்தியதும் கடிதம் தான். ஆனால், அறிவியல் தொழில்நுட்ப சூழலில் வாழும் இன்றைய தலைமுறையினர், தபால் எழுதும் அனுபவமே இல்லாதவர்களாக உள்ளனர். இதனால் மக்களிடம் எழுதும் பழக்கமும் தற்போது குறைந்துவிட்டது எனலாம்.
நம் நாட்டில் பாமர மக்களுக்கு கடிதத்தை விநியோகிப்பதுடன் அதனை படித்து காண்பிக்கும் பழக்கத்தையும் தபால்காரர்கள் கொண்டிருந்தனர். தாத்தா, பாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகையை கொண்டு வந்து தரும் தபால்காரர் தான், நேரில் காணும் தெய்வமாக இருந்தார். அந்த வகையில், ஊர் மக்களுக்கும் தபால்காரருக்கும் பாசப்பிணைப்பு இருந்தது.
ஆனால், கால மாற்றத்தால் முன்பு போல், போஸ்ட் கார்டு, இன்லான்ட் லட்டர் போன்றவற்றை பயன்படுத்துவது தற்போதைய சூழலில் வெகுவாக குறைந்துவிட்டாலும், பதிவுத் தபால், விரைவுத் தபால் தவிர, ஆதார், பாஸ்போர்ட் விண்ணப்பம் பெறுதல், சேமிப்பு கணக்கு போன்ற சேவைகளையும் தபால் நிலையங்கள் வழங்கி வருகின்றன. வங்கிகளுக்கு நிகராக தபால் நிலைய ஏடிஎம் சேவையும் நம் நாட்டில் வந்துவிட்டன.
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. 1764-ல் ஆங்கிலேய ஆட்சியினரால் தொடங்கப்பட்ட இந்திய தபால் துறைக்கு, நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இதில், பெரும்பாலானவை கிராமங்களில் தான் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தபால்கள் ரயில் மூலமும் தபால் துறையின் வாகனங்கள் மூலமும் கொண்டுச் செல்லப்படுகின்றன.
உலக தபால் தினத்தையொட்டி, யாருக்கு முதலில் கடிதம் எழுதினீர்கள் என்ற நியூஸ் 7 தமிழின் கேள்விக்கு, சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பதில்களை பதிவு செய்து வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் வேகமாக மாறினாலும், மனிதர்களிடம் மாறாத அன்புக்கு ஒரு காலத்தில் அடித்தளமாக இருந்தது, தபாலும் தபால் துறையும் தான் என்பதை மறுப்பதிற்கில்லை.








