தொடங்கியது வாக்குப்பதிவு!
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாட்டின் வீட்டு வசதிச் சட்டங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட மாற்றங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து, 2027-ம் ஆண்டு நடைபெற வேண்டிய பொதுத்தேர்தலை 8 மாதங்களுக்கு முன்பாகவே நடத்த பிரதமர் முடிவு செய்தார்.
அதன்படி, நவம்பர் 29 – ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 3.86 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு முதற்கட்ட முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவு முழுவதும் வெளியாகி நவம்பர் 30 – திங்கட்கிழமைக்குள் முழுமையடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்செஸ் கட்சிக்கு கடும் போட்டி!
பிரதமர் பெட்ரோ சான்செஸின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PSOE) தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்க முயற்சித்து வருகிறது.
ஆனால், எதிர்க்கட்சியான ஆல்பர்டோ நூனெஸ் ஃபெய்ஜோ தலைமையிலான கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி (PP) கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 350 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 176 இடங்கள் தேவை. மக்கள் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்ட சாண்டியாகோ அபாஸ்கல் தலைமையிலான ‘வோக்ஸ்’ (Vox) கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கட்சி இந்தத் தேர்தலில் தனது இடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் வீட்டுவசதி நெருக்கடி!
இந்தத் தேர்தல் பிரசாரத்தில் வீட்டு வாடகை மற்றும் வீடுகளின் விலை உயர்வு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, பொதுமக்களுக்கு மலிவு விலையில் வீடுகள் கிடைக்காத நிலை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் குடியேற்றப் பிரச்சினைகள் தேர்தலில் முக்கிய விவாதங்களாக உள்ளன.
வீட்டு வசதிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சான்செஸ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே, ஊழல் குற்றச்சாட்டுகள், கட்டலோனியா பிரிவினைவாதக் கட்சிகளுடனான அரசியல் ஒப்பந்தங்கள் மற்றும் பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறியது போன்ற விவகாரங்களும் சான்செஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
ஆட்சியை மாற்றத் துடிக்கும் வலதுசாரி கட்சிகள்!
கடந்த 2018-ம் ஆண்டு முதல் பிரதமராகப் பதவி வகித்து வரும் பெட்ரோ சான்செஸ், சர்வதேச அளவில் இடதுசாரி தலைவர்களின் முக்கிய முகமாகத் திகழ்கிறார்.
காசா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கொள்கைகளையும் விமர்சித்து வந்துள்ளார்.
ஆனால், உள்நாட்டில் ஊழல் புகார்கள், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் இந்த ஆண்டு ஏற்பட்ட இரண்டு கோர ரயில் விபத்துகளில் 115 பேர் உயிரிழந்த சம்பவம் ஆகியவை அவரது அரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றன.
மறுபுறம், வோக்ஸ் கட்சி சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்துவது, குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை வெளியேற்றுவது உள்ளிட்ட கடுமையான குடியேற்றக் கொள்கைகளை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், ஸ்பெயின் குடிமக்களுக்கு நலத்திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ‘தேசிய முன்னுரிமை’ கொள்கையையும் அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஸ்பெயினில் மீண்டும் வலதுசாரி ஆட்சி அமையுமா?
ஸ்பெயினில் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சி 1939 முதல் 1975 வரை நடைபெற்றது. அதன்பிறகு ஜனநாயக ஆட்சி மலர்ந்த நிலையில், தற்போது வோக்ஸ் கட்சியின் ஆதரவுடன் மக்கள் கட்சி ஆட்சியமைத்தால், ஜனநாயக மாற்றத்திற்குப் பிறகு தேசிய அளவில் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கும் முதல் நிகழ்வாக அது அமையும். இதற்கு முன்பு ஸ்பெயினின் நான்கு பிராந்தியங்களில் இரு கட்சிகளும் இணைந்து அதிகாரத்தைப் பகிர்ந்துள்ளன.
சான்செஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைப்பாரா அல்லது மக்கள் கட்சி மற்றும் வோக்ஸ் கூட்டணி மூலம் ஸ்பெயினில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஸ்பெயினின் அரசியலை மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அதிகாரச் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.




